செய்திகள்

முதல்-அமைச்சராக விண்ணப்பம் போடுகிறாரா? - ஓ.பன்னீர்செல்வம் மீது ப.சிதம்பரம் தாக்கு

Published On 2018-05-17 05:04 GMT   |   Update On 2018-05-17 05:04 GMT
பா.ஜனதாவுக்கு வாழ்த்து தெரிவித்த ஓ.பன்னீர் செல்வத்துக்கு காங்கிரஸ் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். #Chidambaram #OPS
சென்னை:

கர்நாடக சட்டசபை தேர்தலில் வாக்கு எண்ணிக்கையின் போது முதலில் பா.ஜனதா மெஜாரிட்டியை பெற்று ஆட்சியை பிடித்ததாக தகவல் வெளியானது.

தொடர்ந்து பா.ஜனதா தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பா.ஜனதாவுக்கு தமிழக தலைவர்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் மோடிக்கு வாழ்த்து செய்தி அனுப்பி இருந்தார்.

அதில் கர்நாடக தேர்தலில் பா.ஜனதா வெற்றிக்கு வாழ்த்துக்களைதெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டிருந்ததுடன் சுறு சுறுப்பான, மனசாட்சியோடு நேர்மையான உழைப்பால் பெற்ற இந்த வெற்றி உங்களின் புகழ் வெற்றிக்கு மேலும் ஒரு மணிமகுடம். கர்நாடகாவில் பா.ஜ.க.வின் தேர்தல் சாதனை தென்னிந்தியாவில் பிரம்மாண்டமான நுழைவு என்று தெரிவித்து இருந்தார்.

ஆனால் அதன் பிறகு மெஜாரிட்டிக்கான 112 இடங்களை பா.ஜனதா பிடிக்க முடியவில்லை. 104 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தேர்தல் முடிவு முழுமையாக வெளியாவதற்கு முன்பே பா.ஜனதாவுக்கு வாழ்த்து தெரிவித்து விட்டனர்.



இதற்கிடையே பா.ஜனதாவுக்கு வாழ்த்து தெரிவித்த ஓ.பன்னீர் செல்வத்துக்கு காங்கிரஸ் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகாவில் பா.ஜனதா தேர்தல் சாதனையை தென்னிந்தியாவில் பிரம்மாண்டமான நுழைவு வாயில் என்று ஓ.பன்னீர்செல்வம் வரவேற்றிருப்பது ஏன்?

இவர் இந்தி திணிப்பை வரவேற்கிறாரா? அல்லது காவிரி ஆணை மறுப்பை வரவேற்கிறாரா? இல்லை எடப்பாடி பழனிசாமியை நீக்கி விட்டு தன்னை முதல்-அமைச்சராக நியமிக்க விண்ணப்பம் போடுகிறாரா? என்று கூறி உள்ளார். #Chidambaram #OPS

Tags:    

Similar News