செய்திகள்

நிர்மலா தேவியின் ஜாமின் மனு 3-வது முறையாக தள்ளுபடி

Published On 2018-05-25 07:20 GMT   |   Update On 2018-05-25 07:20 GMT
மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரத்தில் கைதான பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமின் மனுவை 3-வது முறையாக ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. #Nirmaladevi
ஸ்ரீவில்லிபுத்தூர்:

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி. இவர் அந்த கல்லூரியில் படிக்கும் 4 மாணவிகளை தவறான முறையில் வழிநடத்த முயன்ற விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து நிர்மலாதேவியை கைது செய்தனர்.

அவர் கொடுத்த தகவலின் பேரில் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைதானார்கள்.

நிர்மலாதேவியை சி.பி.சி.ஐ.டி. போலீசார் 5 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். பின்னர் சாத்தூர், விருதுநகர் நீதி மன்றங்களில் நிர்மலாதேவி ஆஜர்படுத்தப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு விருதுநகர் கோர்ட்டில் நிர்மலா தேவி ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்தார். அது தள்ளுபடி செய்யப்பட்டது.

கடந்த 18-ந் தேதி அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் ஜாமின் கேட்டு மீண்டும் மனுத்தாக்கல் செய்தார். அப்போதும் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில் பேராசிரியை நிர்மலாதேவி 3-வது முறையாக ஜாமின் கேட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதி சிங்கராஜ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. நிர்மலா தேவிக்கு ஜாமீன் கொடுப்பதற்கு அரசு தரப்பு வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார். இதைத் தொடர்ந்து நிர்மலாதேவியின் ஜாமின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

இந்த வழக்கில் தொடர்புடைய பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரது ஜாமின் மனுவும் இதே கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.

அவர்களது ஜாமின் மனுக்கள் குறித்தான விசாரணையை வருகிற 1-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். #Nirmaladevi
Tags:    

Similar News