செய்திகள்

புதிய ரேங்க் பட்டியல் வெளியிட்டால் மருத்துவ கல்லூரிகளில் சேரும் 3 ஆயிரம் மாணவர்கள் கதி என்ன?

Published On 2018-07-10 10:16 GMT   |   Update On 2018-07-10 10:16 GMT
தமிழில் நீட்தேர்வு எழுதியவர்களுக்கு கருணை மதிப்பெண் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ள நிலையில் கலந்தாய்வு முடிந்து கல்லூரியில் சேர காத்திருக்கும் 3 ஆயிரம் மாணவர்கள் கதி என்ன? என்று கேள்வி எழுந்துள்ளது. #Neetexam

சென்னை:

நீட் தேர்வில் தமிழில் தேர்வு எழுதிய மாணவ- மாணவிகளுக்கான வினாத்தாளில் குளறுபடி தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் 49 வினாக்களுக்கு கருணை அடிப்படையில் 196 மதிப்பெண்கள் வழங்கவும், 2 வாரத்தில் புதிய தர வரிசை பட்டியல் தயாரித்து வெளியிடவும் மதுரை கோர்ட்டு இன்று அதிரடியாக உத்தரவிட்டது.

கோர்ட்டின் இந்தஅதிரடி உத்தரவு மருத்துவ மாணவர்களிடையே மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஏற்கனவே தர வரிசை பட்டியல் வெளியிட்டு கவுன்சிலிங் நடத்தி தமிழகத்தில் அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் மாணவர்கள் சேர்க்கை முடிவடைந்துவிட்டது.

சுமார் 3 ஆயிரம் மாணவர்கள் நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் இடங்களை பெற்று சேர்ந்து விட்டனர். கல்லூரிகள் திறக்கும் நாளை அவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் கோர்ட்டு தீர்ப்பு முட்டுக்கட்டை போட்டுள்ளது. 196 மதிப்பெண் வழங்கி புதிதாக தரவரிசை பட்டியல் தயாரித்தால் ஏற்கனவே சேர்ந்துள்ள மாணவர்கள் சிலரது வாய்ப்பு பறிபோகும். புதிதாக சில மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத கதையாக இடம் கிடைத்தும் வாய்ப்பை இழக்கும் நிலைக்கும் சில மாணவர்கள் தள்ளப்படுவார்கள். அவர்களும் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி பற்றி கோர்ட்டில் நியாயம் கேட்பார்கள்.

சிக்கலை தவிர்க்க கூடுதலாக இடங்களை உருவாக்கலாம். அப்படி உருவாக்குவதற்கு அகில இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிமுறைகள் இடம் கொடுக்க வேண்டும்.

ஒருவேளை இந்த ஆண்டு சிறப்பு நிகழ்வாக கூடுதல் இடங்களை உருவாக்கி விட்டு அடுத்த ஆண்டு அதை ரத்து செய்தால் சிக்கல் எழும்.

சி.பி.எஸ்.இ. மேல்முறையீடு செய்து தடை பெறலாம். அப்படி தடை பெற்றாலும் இறுதி தீர்ப்பு வரும்வரை கல்லூரிகளை திறக்க முடியுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

நீட் தேர்வு நடந்ததும் வினாத்தாள் மொழி பெயர்ப்பில் குளறுபடி இருப்பதாக சர்ச்சை எழுந்தது. அப்போதே அதுபற்றி ஆய்வு செய்து ஏதாவது மாற்று ஏற்பாடுகளை செய்து பிரச்சினையை தீர்த்து இருக்க வேண்டும். அதை செய்ய சி.பி.எஸ்.இ. தவறி விட்டது.

சி.பி.எஸ்.இ. செய்த குளறுபடியால் மிகப்பெரிய சிக்கலுக்குள் சிக்கி தவிப்பது தமிழக மாணவர்கள்தான். மகிழ்ச்சியுடன் கலந்தாய்வுக்கு சென்று இடமும் கிடைத்து கல்லூரிக்கு புறப்பட தயாராக இருந்த மாணவர்கள் கலக்கத்தில் ஆழ்ந்து இருக்கிறார்கள். #Neetexam

Tags:    

Similar News