செய்திகள்
கைது செய்யப்பட்ட சந்துருஜி

ஏ.டி. எம். மோசடியில் கைதான சந்துருஜிக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் கைதாகிறார்கள்

Published On 2018-07-12 10:50 GMT   |   Update On 2018-07-12 10:50 GMT
புதுவையில் போலி ஏ.டி.எம். கார்டுகள் தயாரித்து மோசடி செய்ததில் முக்கிய குற்றவாளியான சந்துருஜி 80 நாட்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார். #ATMFraud
புதுச்சேரி:

புதுவையில் போலி ஏ.டி.எம். கார்டுகள் தயாரித்து மோசடி செய்ததில் முக்கிய குற்றவாளியான சந்துருஜி 80 நாட்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையில் இருந்த அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். மும்பை, டெல்லி என வடமாநிலங்களில் சுற்றித் திரிந்த சந்துருஜி தனது நண்பர்கள் மற்றும் வேண்டியவர்களுடன் வாட்ஸ்-அப் மூலம் தகவல்களை பரிமாறுவது போலீசாருக்கு தெரிய வந்தது.

இதை சென்னையில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனம் மூலம் கண்காணித்த போலீசார் தென் சென்னையில் உள்ள அரசியல் பிரமுகர் ஒருவரை சந்திக்க வருவதை கண்டுபிடித்தனர்.

அவரை எதிர்பார்த்து ரகசியமாக காத்து இருந்த போலீசாரிடம் சந்துருஜி சிக்கினார். அவரை நேற்று புதுவைக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

அப்போது இந்த மோசடி தொடர்பாக பல்வேறு புதிய தகவல்களையும் போலீசாரிடம் அவர் தெரிவித்தார்.

ஏ.டி.எம்.மோசடியில் ஏற்கனவே 15 பேர் கைது செய்யப்பட்டு இருந்தனர். இப்போது சந்துருஜியும் கைதானதை அடுத்து இதன் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.

இந்த மோசடியில் மேலும் பலர் சம்பந்தப்பட்டுள்ளனர். அவர்கள் யார்? என்று சந்துருஜியிடம் விசாரித்தனர். ஆனால், அவர் இன்னும் முழுமையான விவரங்களை சொல்லவில்லை.

இன்று சந்துருஜியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். அடுத்ததாக காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர். அப்போது மற்ற குற்றவாளிகள் யார்? என்பது பற்றிய விவரங்கள் தெரியவரும்.

போலி ஏ.டி.எம். கார்டுகளை தயாரிப்பதற்கு 2 முறைகளை கையாண்டு உள்ளனர். ஏ.டி.எம்.களில் ஸ்கிம்மர் கருவிகளை ரகசியமாக பொருத்தி அதன் மூலம் ஏ.டி.எம். கார்டில் உள்ள ரகசிய குறியீடுகளை பெற்று போலி கார்டுகளை தயாரித்து இருக்கிறார்கள்.

சர்வதேச கும்பல் ஒன்று மற்றவர்களின் ஏ.டி.எம். கார்டு குறியீடுகளை கம்ப்யூட்டர் ஹேக்கிங் மூலம் பெற்று அவற்றை மோசடி கும்பலுக்கு விற்று வருகிறார்கள்.

அந்த கும்பலிடம் இருந்தும் இணையதளம் மூலம் ஏ.டி.எம். கார்டு ரகசியங்களை தலா 4 டாலர் பணம் கொடுத்து வாங்கி இருக்கிறார்கள். அதன் மூலமும் போலி ஏ.டி.எம். கார்டு தயாரித்துள்ளனர்.

பெரும்பாலான ஏ.டி.எம். கார்டுகள் வெளிநாட்டை சேர்ந்தவர்களுடையதாகும். வெளிநாடுகளில் ஏ.டி.எம். கார்டில் இருந்து பணம் எடுக்கும் போது அதற்கான எஸ்.எம்.எஸ். தகவல்கள் வாடிக்கையாளர்களுக்கு வராது.

மேலும் ஏ.டி.எம். கார்டில் பணம் திருட்டு போனால் சம்பந்தப்பட்ட வங்கிகளே அந்த பணத்தை வாடிக்கையாளருக்கு திருப்பி கொடுத்து விடும்.

எனவே, பணத்தை இழந்தவர்கள் புகார் செய்ய மாட்டார்கள். இதனால் நமக்கு சிக்கல் வராது என்று கருதியே வெளிநாட்டினரை குறிவைத்து மோசடி செய்து இருக்கிறார்கள்.

இதுவரை 140 போலி ஏ.டி.எம். கார்டுகளை அவர்கள் தயாரித்து மோசடி செய்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அதில், 4 கார்டுகள் மட்டுமே இந்தியர்களுடையது. மற்ற அனைத்து கார்டுகளுமே வெளிநாட்டை சேர்ந்தவர்களின் கார்டு ஆகும்.

அமெரிக்கா, சவுதி அரேபியா, ஜப்பான், சுவீடன் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் இதில் அதிகமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன் மூலம் பல கோடி ரூபாய் பணம் எடுத்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்னும் பல நூறு இருக்கலாம் என கருதப்படுகிறது. அது விசாரணைக்கு பின்னரே கண்டுபிடிக்க முடியும்.

ஏ.டி.எம். கார்டுகளை ஸ்வைப்பிங் எந்திரத்தில் தேய்த்து அதன் மூலம் பொருட்கள் வாங்கியது போல் காட்டி தங்களது வங்கி கணக்குக்கு பணமாக மாற்றி இருக்கிறார்கள்.

மேலும் கோவை- சென்னையை சேர்ந்த டிராவல்ஸ் ஏஜென்சி மூலம் இந்த போலி கார்டுகளை பயன்படுத்தி விமான டிக்கெட்டுகளை வாங்கி பின்னர் அதை சலுகை விலையில் விற்று அதன் மூலமும் பல கோடி ரூபாய் சம்பாதித்து உள்ளனர்.

எவ்வளவு பணம் மோசடி செய்து இருக்கிறார்கள் என்ற விவரங்களை தற்போது சேகரித்து வருகிறார்கள்.

இந்த பணத்தை பயன்படுத்தி ஏராளமான அசையும் மற்றும் அசையா சொத்துக்களை வாங்கி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

முக்கிய குற்றவாளி சந்துருஜி இவ்வளவு நாளும் தலைமறைவாக இருந்ததற்கு பலரும் உதவி இருக்கிறார்கள்.

ஆரம்பத்தில் புதுவையையொட்டி உள்ள தமிழக நகரங்களில் தான் தங்கி இருந்துள்ளார். அதன் பிறகு பெங்களூர் சென்ற அவர், பின்னர் மும்பை, டெல்லி என சுற்றி திரிந்துள்ளார்.

அவர் தொடர்ந்து புதுவையை சேர்ந்த பலருடன் தொடர்பில் இருந்துள்ளார். டெலிபோன் மூலம் அவர்களுடன் பேசி வந்துள்ளார். இவர்களில் பலர் சந்துருஜி ரகசியமாக தங்குவதற்கு ஏற்பாடுகளை செய்து கொடுத்துள்ளனர்.

அவர்கள் யார்? என்ற பட்டியலை போலீசார் தயாரித்து வருகிறார்கள். சந்துருஜியை காவலில் எடுத்து விசாரிக்கும் போதும், இதுபற்றி முழுமையாக விசாரிக்க இருக்கிறார்கள்.

அப்போது அடைக்கலம் கொடுத்த நபர்களின் முழு விவரங்களும் தெரிய வரும். அவர்களையும் கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

சந்துருஜியிடம் விசாரணை நடத்திய பிறகு மேலும் குற்றவாளிகள் இதில் இருப்பது தெரியவந்தால் கைது செய்யப்படுவார்கள்.

அதன் பிறகு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து வழக்கை தீவிரமாக நடத்த போலீசார் முடிவு செய்து இருக்கிறார்கள். #ATMFraud
Tags:    

Similar News