இந்தியா

நாளைக்குள் முதல்வர் பதவி ஏற்கவில்லை என்றால் மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படுமா?

Published On 2024-11-25 01:30 GMT   |   Update On 2024-11-25 01:30 GMT
  • மகாராஷ்டிராவின் சட்டசபை காலம் நாளையுடன் முடிவடைகிறது.
  • அதற்குள் புதிய முதல்வர் பதவி ஏற்க வேண்டும். அதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 20-ந்தேதி 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. நேற்று முன்தினம் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் பா.ஜ.க.,சிவ சேனா (ஏக்நாத் ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) கட்சிகளை கொண்ட மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றது.

முதல்வர் யார் என்பதில் இந்த கூட்டணிக்குள் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. முதல்வர் யார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இதற்கிடையே நாளையுடன் மகாராஷ்டிரா மாநிலத்தின் சட்டமன்ற காலம் முடிவடைகிறது. அதற்குள் புதிய அரசு அமைக்கப்பட வேண்டும். முதல்வர் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதால் நாளைக்குள் புதிய அரசு அமைக்கப்பட வாய்ப்பு இல்லை.

நாளைக்குள் ஒருவேளை முதல்வர் பதவி ஏற்கவில்லை என்றால் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படுமா? என அனுமானம் எழுந்துள்ளது.

ஆனால் 26-ந்தேதிக்குள் புதிய ஆட்சி அமைக்க வேண்டும் என அரசியலமைப்பு தேவை இல்லை எனச் சொல்லப்படுகிறது.

மகாராஷ்டிராவில் இதற்கு முன்னதாக சட்டசபை காலம் காலாவதியான நிலையிலும் சில நாட்கள் கழித்து புதிய அரசு அமைக்கப்பட்டுள்ளதற்கு உதாரணம் உள்ளது.

10-வது சட்டமன்ற காலம் 2004-ம் ஆண்டு நவம்பர் 3-ந்தேதி முடிவடைந்துள்ளது. 12-வது சட்டமன்றத்திற்காக முதல்வர் நம்வபர் 7-ந்தேதி பதவி ஏற்றுள்ளார்.

அதேபோல் 12-வது சட்டசபை காலம் 2014-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதியுடன் முடிவடைந்தது. 13-வது சட்டமன்றத்திற்கான புதிய முதல்வர் சில நாட்கள் கழித்துதான் பதவி ஏற்றுள்ளார்.

13-வது சட்டமன்ற காலம் 2019 நவம்பர் 19-ந்தேதி முடிவடைந்தது. 14-வது சட்டமன்ற காலத்திற்கான புதிய முதல்வர் நவம்பர் 28-ந்தேதிதான் பதிவு ஏற்றார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வர்கள் பதவி ஏற்க சில நாட்கள் எடுத்துக் கொள்ளப்பட்டது பல முறை நடந்துள்ளது எனச் சொல்லப்படுகிறத.

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. 132 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. சிவசேனா 57 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சி 41 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா 20 இடங்களிலும், காங்கிரஸ் 16 இடங்களிலும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 10 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

Tags:    

Similar News