இந்தியா

ஜி.பி.எஸ்.-யின் தவறான வழிகாட்டுதலால் ஆற்றில் விழுந்த கார்: 3 பேர் உயிரிழந்த பரிதாபம்

Published On 2024-11-25 02:48 GMT   |   Update On 2024-11-25 02:48 GMT
  • சேதமடைந்த காரை பார்த்த கிராம மக்கள், ராமகங்கா ஆற்றில் இருந்து அதனை வெளியே எடுத்தனர்.
  • உயிரிழந்தவர்கள் கூகுள் மேப்பை நம்பியிருந்ததாக உடலை வாங்க குடும்பத்தினர் தெரிவித்தனர்.

சாலை வழியாக பயணம் செய்பவர்களில் பெரும்பாலானோர் செல்ல வேண்டிய இடத்தை சென்றடைய ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில உத்தர பிரதேசத்தில் இரண்டு சகோதரர்கள் உட்பட மூவருக்கு, அது ஒரு சோகமான முடிவை அளித்துள்ளது.

நேற்று காலை பரேலியில் இருந்து படாவுன் மாவட்டத்தில் உள்ள டேடாகஞ்ச் நோக்கி சென்றபோது, ஜிபிஎஸ் மூலம் கார், பழுதடைந்த பாலத்தின் மீது ஏறி, ஃபரித்பூரில் 50 அடிக்கு கீழே ஓடும் ஆற்றில் கவிழ்ந்தது.

சேதமடைந்த காரை பார்த்த கிராம மக்கள், ராமகங்கா ஆற்றில் இருந்து அதனை வெளியே எடுத்தனர். அப்போது காரில் இருந்த மூவரும் (இரண்டு சகோதரர்கள் உள்பட) உயிரிழந்ததை கண்டனர். விபத்து குறித்து கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், வெள்ளத்தால் பாலத்தின் முன் பகுதி ஆற்றில் இடிந்து விழுந்தது. ஆனால் இந்த மாற்றம் ஜிபிஎஸ்-ல் புதுப்பிக்கப்படவில்லை. இதன் விளைவாக, தவறாக வழி நடத்தலால் இந்த விபத்து நடந்துள்ளதாக அப்பகுதி வட்ட அதிகாரி அசுதோஷ் சிவம் தெரிவித்தார்.

உயிரிழந்தவர்கள் கூகுள் மேப்பை நம்பியிருந்ததாக உடலை வாங்க குடும்பத்தினர் தெரிவித்தனர். மேலும் பாலம் முழுமையடையாமல் கிடப்பதாலும், வரும் வாகனங்களை எச்சரிக்கும் வகையில் அப்பகுதியில் தடுப்புகள் ஏதும் இல்லாததாலும் துறை அதிகாரிகள் மீது குற்றம்சாட்டியுள்ளனர்.

நிர்வாகத்தின் அலட்சியமே விபத்துக்கு காரணம் என குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். மேலும் இது போன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க மாவட்ட ஆட்சியரிடம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், கட்டுமானத்தில் இருக்கும் பாலத்தில் பாதுகாப்பு தடைகள், எச்சரிக்கை பலகைகள் இல்லாதது ஆபத்தை அதிகரிக்கிறது, இது ஆபத்தான விபத்துக்கு வழிவகுத்தது என்று அசுதோஷ் சிவம் கூறினார்.

Tags:    

Similar News