இந்தியா

பரபரப்பான அரசியல் சூழலில் பாராளுமன்றம் இன்று கூடுகிறது

Published On 2024-11-25 02:10 GMT   |   Update On 2024-11-25 02:10 GMT
  • பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த ஒத்துழைக்க வேண்டும் என மத்திய அரசு சார்பில் கூட்டத்தில் கோரிக்கை விடப்பட்டது.
  • வைகோ பேசும்போது, அதானி விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

புதுடெல்லி:

நாட்டின் முக்கியமான மாநிலங்களில் ஒன்றான மராட்டியத்தில் ஆட்சியை தக்க வைத்ததை மத்தியில் ஆளும் பா.ஜனதா தலைவர்கள் பெரும் வெற்றியாக கொண்டாடி வருகின்றனர்.

அதேநேரம் மணிப்பூர் கலவரம், அதானி முறைகேடு உள்ளிட்ட பிரச்சினைகள் மத்திய அரசுக்கு தலைவலியாகவே தொடர்கிறது.

இத்தகைய பரபரப்பான சூழலில் இந்த ஆண்டுக்கான பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது.

டிசம்பர் 20-ந் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் 16 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு பட்டியலிட்டு உள்ளது.

இதில் முக்கியமாக, கடந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ள வக்பு வாரிய திருத்த மசோதாவை குளிர்கால கூட்டத்தொடரில் நிறைவேற்ற அரசு தீவிரம் காட்டி வருகிறது.

எதிர்க்கட்சிகளால் கடும் எதிர்ப்பை சந்தித்த இந்த மசோதா, பாராளுமன்ற கூட்டுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இந்த குழு, மசோதா தொடர்பான அறிக்கையை குளிர்கால கூட்டத்தொடரில் முதல் வாரத்தின் கடைசி நாளில் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம் ஆகும். அதன்படி இந்த வாரமே அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது.

இந்த மசோதாவை தவிர பஞ்சாப் கோர்ட்டுகள் (திருத்தம்) மசோதா, வணிக கப்பல் மசோதா, கடலோர கப்பல்கள் மசோதா, இந்திய துறைமுகங்கள் மசோதா உள்ளிட்ட மசோதாக்களும் நிறைவேற்ற திட்டமிடப்பட்டு உள்ளது.

மேலும் 2024-25-ம் நிதியாண்டுக்கான துணை மானிய கோரிக்கைகளின் முதல் பகுதியும் தாக்கல் செய்யப்பட்டு விவாதித்து நிறைவேற்றவும் பட்டியலிடப்பட்டு உள்ளது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் தொடர்பான மசோதாக்கள் எதுவும் இந்த தொடருக்காக மத்திய அரசு பட்டியலிடவில்லை.

எனினும் அந்த மசோதாவை வருகிற தொடரிலேயே தாக்கல் செய்ய அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இந்த நிலையில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்த அனைத்துக்கட்சிகளின் கூட்டம் ஒன்றை மத்திய அரசு நேற்று நடத்தியது.

பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், ஜே.பி.நட்டா ஆகியோர் அரசு சார்பில் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் காங்கிரசை சேர்ந்த ஜெய்ராம் ரமேஷ், கவுரவ் கோகாய் மற்றும் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா (தி.மு.க.), வைகோ (ம.தி.மு.க.), ஹர்சிம்ரத் கவுர், அனுபிரியா படேல் என 30 கட்சிகளை சேர்ந்த 42 எம்.பி.க்கள் பங்கேற்றனர்.

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த ஒத்துழைக்க வேண்டும் என மத்திய அரசு சார்பில் கூட்டத்தில் கோரிக்கை விடப்பட்டது.

அதேநேரம் கூட்டத்தில் பேசிய காங்கிரசின் கவுரவ் கோகாய், அதானி விவகாரம், மணிப்பூர் கலவரம் போன்ற பிரச்சினைகள் குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதைப்போல வட மாநிலங்களில் அதிகரிக்கும் காற்று மாசுபாடு, தொடரும் ரெயில் விபத்துகள் குறித்தும் விவாதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

கூட்டத்தில் பேசிய திருச்சி சிவா எம்.பி., வக்பு வாரிய திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

வைகோ பேசும்போது, அதானி விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இந்த கூட்டத்தில் கேட்டுக்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கிரண் ரிஜிஜு, 'பாராளுமன்ற கூட்டத்தொடர் சுமுகமாக நடைபெறுவதை உறுதி செய்யுமாறு கட்சிகளை கேட்டுக்கொண்டோம்' என்று கூறினார்.

அதானி விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படுமா? என்ற கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், 'பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டிய விவகாரங்கள் குறித்து மக்களவை சபாநாயகர் மற்றும் மாநிலங்களவை அவைத்தலைவர் ஆகியோரின் ஒப்புதலுடன் இரு அவைகளின் அலுவல் ஆய்வுக்குழு முடிவு செய்யும். நாங்கள் எந்த விவாதத்தையும் சந்திக்க தயாராக இருக்கிறோம் என்று கூறினார்.

இவ்வாறு அதானி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு இருப்பதால் குளிர்கால கூட்டத்தொடரில் பெரும் புயல் வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News