செய்திகள்

சிறுமி பாலியல் கொடுமை எதிரொலி - அடுக்குமாடி குடியிருப்பில் பெண்கள் பாதுகாப்பு படை

Published On 2018-07-19 10:47 GMT   |   Update On 2018-07-19 10:47 GMT
சென்னை அயனாவரத்தில் சிறுமி பாலிபல் பலாத்காரம் செய்யப்பட்டது எதிரொலியாக அடுக்குமாடி குடியிருப்பில் பெண்கள் பாதுகாப்பு படை ஷிப்டு முறையில் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
சென்னை:

சென்னை அயனாவரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் 11 வயது சிறுமியை காவலாளிகள், பிளம்பர்கள் என 17 பேர் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து தனியார் நிறுவன காவலாளிகள் மீதான நம்பிக்கை போய் விட்டது. சென்னையில் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன.

இங்கு காவலாளிகளாக தனியார் செக்யூரிட்டி நிறுவனங்களில் இருந்து ஆட்களை நியமிக்கிறார்கள். அவர்கள் மீதான நம்பகத்தன்மை பற்றி குடியிருப்பு நலச்சங்கங்கள் கவனம் செலுத்த தொடங்கி உள்ளனர்.

மேலும் காவலாளிகள் இருந்தாலும் தங்களைத் தாங்களே பாதுகாக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

சிறுமி பாலியல் கொடுமை நடந்த அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் அங்கு வசிப்பவர்களே தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக காவல் பணியில் ஈடுபடுகிறார்கள்.

இது தொடர்பாக குடியிருப்பு நலச்சங்க நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் இங்குள்ள 300 குடியிருப்புகளில் வசிக்கும் ஆண்களும், பெண்களும் குடும்பத்தோடு கலந்து கொண்டனர்.

இதில் 10 பேர் கொண்ட பெண்கள் காவல்படை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இவர்கள் 8 மணி நேர பணியில் ஷிப்டு முறையில் ஈடுபடுத்தப்படுவார்கள். இதுபற்றி குடியிருப்பு நலச்சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதன் மூலம் வேலியே பயிரை மேய்ந்தது போல் காவலாளிகள் மீது நம்பிக்கை குறைந்துவிட்டது. நல்ல செக்யூரிட்டி நிறுவனங்களிடம் இருந்து நேர்மையான, ஒழுக்கமான, சிறந்த காவலாளிகளை தேடிவருகிறோம். புதிய காவலாளிகள் கிடைக்கும் வரை 10 பேர் கொண்ட பெண்கள் காவலர் படையை தேர்வு செய்துள்ளோம்.

இவர்கள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுவார்கள். குடியிருப்புக்கு வரும் வெளியாட்கள், உறவினர்கள் என அனைவரது முகவரியும், செல்போன் எண்களுடன் வருகைப்பதிவேட்டில் பதிவு செய்யப்படும். நுழைவு வாயிலிலும், வெளியேறும் வாயிலிலும் போன் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. குடியிருப்புகளுக்கு வரும் உறவினர்கள் பற்றி குடியிருப்பு வாசிகளுடன் தொடர்பு கொண்டு வரும் நபர் பற்றிய தகவல்களை தெரிவித்து விசாரிக்கப்படும். அவர் சரியான நபர்தான் என்பதை உறுதி செய்த பின்னரே அனுமதிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News