செய்திகள்

திருபுவனை பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய சென்னையை சேர்ந்தவர் கைது

Published On 2018-07-27 09:58 GMT   |   Update On 2018-07-27 09:58 GMT
திருபுவனை பகுதிகளில் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய சென்னையை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 26 திருட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருபுவனை:

திருபுவனை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்தன.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருபுவனையை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் திருசே‌ஷன் (வயது 23) என்பவர் மதகடிப்பட்டு சந்தை தோப்பில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு காய்கறி வாங்க சென்றார்.

பின்னர் காய்கறி வாங்கிக் கொண்டு திரும்பிய போது மோட்டார் சைக்கிளை காணாமல் திருசே‌ஷன் திடுக்கிட்டார். மோட்டார் சைக்கிளை யாரோ திருடி சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து அவர் திருபுவனை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் மோட்டார் சைக்கிள் திருடர்களை கண்டுபிடிக்க தீவிர வாகன சோதனை நடத்தும்படி போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் உத்தரவிட்டார்.

இதையடுத்து திருபுவனை போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் நேற்று இரவு ஆண்டியார் பாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக நம்பர் பிளேட் இல்லாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த வாலிபரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அந்த வாலிபர் முன்னுக்குப்பின் முராணான தகவல்களை தெரிவித்ததால் அந்த வாலிபரை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரித்தனர்.

விசாரணையில் அந்த வாலிபர் செனனை அனகா புத்தூரை சேர்ந்த அலெக்ஸ் (37) என்பதும், அவர் ஓட்டி வந்தது திருட்டு மோட்டார் சைக்கிள் என்பதும் தெரியவந்தது.

மேலும் இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு திருபுவனையை சேர்ந்த திருசே‌ஷனுக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை திருடியதையும் ஒப்புக் கொண்டார்.

அதோடு இவர் மடுகரை அருகே தமிழகபகுதியான சிறுவந்தாட்டில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி, நல்லூரை சேர்ந்த தனது கூட்டாளி கனியமுது (27) என்பவருடன் சேர்ந்து பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள்களை திருடியதாக தெரிவித்தார்.

இதையடுத்து அலெக்ஸ் மற்றும் அவரது கூட்டாளி கனியமுது ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 26 திருட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

Similar News