செய்திகள்
கீழக்குண்டலப்பாடியில் ஒரு வீட்டின் மொட்டை மாடியில் தஞ்சம் அடைந்து சமையல் செய்தனர்

வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் மொட்டை மாடியில் சமைத்து சாப்பிட்ட பொதுமக்கள்

Published On 2018-08-20 09:15 GMT   |   Update On 2018-08-20 09:15 GMT
கொள்ளிடம் ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருவதால் வீடுகளை முற்றிலுமாக சூழ்ந்தது. இதனால் பலர் தங்களது வீடுகளில் உள்ள மொட்டை மாடிகளில் சமைத்து சாப்பிடுகின்றனர்.
கீழணையில் இருந்து அதிகபடியான தண்ணீர் திறக்கப்பட்டதால் பழைய கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

இதனால் சிதம்பரம் அருகே உள்ள திட்டுக்காட்டூர், பெராம்பட்டு, மேலக்குண்டலப்பாடி, அக்கரைஜெயங்கொண்ட பட்டினம், மரத்தான்தோப்பு போன்ற பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்து கடந்த 6 நாட்களாக இந்த பகுதியில் தண்ணீர் குளம்போல் தேங்கி நிற்கிறது.

இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை திடீரென்று கீழணையில் இருந்து 3 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டதால் 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. பலர் தங்களது வீடுகளில் தண்ணீர் புகாமல் இருக்க மணல் மூட்டைகளை வைத்து தடுப்பு ஏற்படுத்தினர்.

தெருக்களில் தண்ணீர் ஆறுபோல் ஓடுகிறது. இதனால் கிராம மக்கள் வீடுகளில் இருந்த முக்கிய பொருட்களை எடுத்து கொண்டு பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர். மேலும் பலர் வெள்ளத்தில் சிக்கி தவித்தனர்.

இதனை தொடர்ந்து மீட்பு குழுவினர் மற்றும் கிராம இளைஞர்கள் இணைந்து படகுகள் மூலம் அவர்களை மீட்டனர். 3,600-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கொள்ளிடம் ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருவதால் 2 ஆயிரம் வீடுகள் முற்றிலுமாகவும், 5 ஆயிரம் வீடுகள் பாதியளவும் தண்ணீரால் மூழ்கியுள்ளது. அந்த பகுதியில் உள்ள கோவில்களையும் தண்ணீர் சூழ்ந்தன.

வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கி இருப்பதால் பலர் தங்களது வீடுகளில் உள்ள மொட்டை மாடிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களில் பலர் அங்கேயே சமையல் செய்து சாப்பிட்டு வருகிறார்கள்.

பெரம்பட்டு பகுதியில் பல்நோக்கு சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 3,600 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு, மருந்து, குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு அமைப்பினரும் உணவு பொருட்கள் வழங்கினர்.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கூறியதாவது:-

கீழணையில் இருந்து முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் திடீரென்று தண்ணீரை அதிகளவு திறந்து விடுகிறார்கள். இதனால் பல கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. எப்போது என்ன நடக்கும் என்ற அசத்திலேயே நாங்கள் உள்ளோம்.

எங்களுக்கு உணவு பொருட்கள் வழங்குகிறார்கள். நாங்கள் வளர்த்து வரும் கால்நடைகளுக்கு உணவு கிடைக்காமல் தவிக்கின்றன. அதற்கு வேண்டிய ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். #tamilnews
Tags:    

Similar News