திருமங்கலம் அருகே கார் மோதி தொழிலாளி பலி
பேரையூர்:
மதுரை தத்தனேரி அருள் தாஸ்புரத்தைச் சேர்ந்தவர் பொன்முனியாண்டி (வயது 40), தொழிலாளி. இவர் மதுரை லாரி டிரைவர் சக்தியுடன் விருதுநகர் சென்று விட்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார்.
கள்ளிக்குடி போலீஸ் சரகத்துக்குட்பட்ட நல்லமநாயக்கன்பட்டி விலக்கு பகுதியில் இன்று அதிகாலை வந்த அவர்கள் லாரியை நிறுத்தி விட்டு சாலையின் எதிர்புறம் உள்ள ஓட்டலுக்கு சென்றனர்.
பின்னர் அவர்கள் சாலையை கடந்தபோது விருதுநகரில் இருந்து பேரையூர் நோக்கி சென்ற கார் மோதியது. இதில் பொன்முனியாண்டி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.
விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் கள்ளிக்குடி போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பலியான பொன்முனியாண்டி உடல் பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
விபத்து தொடர்பாக காரை ஓட்டி வந்த பேரையூர் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த ராஜாமுகமதுவை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள மேலகரம் பாரதிநகரைச் சேர்ந்தவர் சந்திரகுமார். இவருடைய மனைவி சொர்ணலதா, மேலகரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக உள்ளார்.
இன்று காலை டாக்டர் சொர்ணலதா தனது மகள் சுபஸ்ரீ (வயது17)யுடன் காரில் மதுரை வந்து கொண்டிருந்தார். காரை முதுகுளத்தூரைச் சேர்ந்த டிரைவர் ஞானசேகரன் (35) ஓட்டி வந்தார்.
கப்பலூர் மேம்பாலத்தில் கார் வந்தபோது தூத்துக்குடியில் இருந்து விருதுநகர் சென்ற லாரி எதிர் பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் கார் அப்பளம்போல் நொறுங் கியது.
டாக்டர் சொர்ணலதா, மகள் சுபஸ்ரீ, கார் டிரைவர் ஞானசேகரன், லாரி டிரைவர் ஆத்திகுளம் கலிய மூர்த்தி (43) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.