பாலத்துக்கு கீழே தூக்கி வீசப்பட்ட பச்சிளம் குழந்தை.. 2 மாதம் போராடி காப்பாற்றிய மருத்துவர்கள்
- 50க்கும் மேற்பட்ட காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலைமையில் குழந்தை கண்டெடுக்கப்பட்டது.
- 2 மாத சிகிச்சைக்கு பிறகு அக்குழந்தை முழுவதுமாக குணமாகியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ஹமிர்பூரில் கடந்த ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி பிறந்து 7 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை பெற்றோர் பாலத்தில் இருந்து கீழே வீசியுள்ளனர். பாலத்தின் கீழே இருந்த மரத்தில் சிக்கி தவித்த குழந்தையை அப்பகுதியினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
50க்கும் மேற்பட்ட காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலைமையில் அனுமதிக்கப்பட்ட குழந்தையை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.
2 மாத சிகிச்சைக்கு பிறகு அக்குழந்தை முழுவதுமாக குணமாகியுள்ளது. ஜென்மாஷ்டமி அன்று இக்குழந்தை கண்டுபிடிக்கப்பட்டதால் அக்குழந்தைக்கு கிருஷ்ணா என்று மருத்துவர்கள் பெயரிட்டுள்ளனர்.
முழுவதுமாக குணமடைந்த பிறகு இக்குழந்தையை குழந்தைகள் நலக்குழு உறுப்பினர்களிடம் அக்டோபர் 24 அன்று மருத்துவர்கள் ஒப்படைத்தனர்.
இது தொடர்பாக பேசிய டாக்டர் கலா, "அந்த பெற்றோருக்கு இக்குழந்தை தேவையில்லையெனில் மருத்துவமனையிலோ அல்லது, கோவில், மசூதியிலோ குழந்தையை விட்டு சென்றிருக்கலாம். அவ்வாறு செய்திருந்தால் குழந்தைக்கு அடிபடாமல் இருந்திருக்கும். குழந்தையை விட்டு பிரியும்போது மருத்துவமனையில் உள்ள அனைத்து ஊழியர்களும் தங்களது குழந்தையை பிரிவது போல நினைத்து கண்ணீர் விட்டு அழுதார்கள்" என்று தெரிவித்தார்.