இந்தியா

'இறக்குமதி பொருள்': அரவிந்த் சாவந்த் வாயை பாலாசாகேப் தாக்கரே உடைத்திருப்பார்- ஏக்நாத் ஷிண்டே

Published On 2024-11-02 07:30 GMT   |   Update On 2024-11-02 07:30 GMT
  • பாஜக தலைவர் ஷைனா என்.சி.அக்கட்சியில் இருந்து விலகி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியில் இணைந்தார்.
  • போலீசார் எம்.பி. அரவிந்த் சாவந்த் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் மாகாயுதி கூட்டணி ஆட்சி செய்து வருகிறது. இந்த கூட்டணியில் பா.ஜ.க., ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உள்ளன.

மகாராஷ்டிரா மாநிலத்தில் பா.ஜ.க.வின் செய்தி தொடர்பாளர்களாக இருந்தவர் ஷைனா என்.சி. திடீரென பா.ஜ.க.-வில் இருந்து விலகி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியில் இணைந்தார்.

கட்சியில் சேர்ந்த உடனே மும்பாதேவி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார்.

மும்பாதேவி தொகுதியில் கூட்டணி கட்சி வேட்பாளரை ஆதரித்து உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சி எம்.பி. அரவிந்த் சாவந்த், தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், "இந்த தொகுதியில் போட்டியிடும் ஷைனா என்.சி. பா.ஜ.க. வில் இருந்த போது அவருக்கு சீட் கிடைக்கவில்லை என்பதால் அங்கிருந்து விலகி ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவில் இணைந்தார். இவரை போன்ற இறக்குமதி பொருளை ஏக்நாத் ஷிண்டே கட்சியில் சேர்த்துள்ளனர். இதனால் அவர் கட்சி வேட்பாளராகிவிட்டார்" என ஆபாசமாக விமர்சித்தார்.

இது குறித்து நக்பாடா போலீஸ் நிலையத்தில் ஷைனா என்.சி., புகார் அளித்தார். போலீசார் எம்.பி. அரவிந்த் சாவந்த் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பேசிய மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, "இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. ஒரு பெண்ணைப் பற்றி தவறாகப் பேசுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. உத்தவ் தாக்கரேவின் தந்தை பாலாசாகேப் உயிருடன் இருக்கும்போது அரவிந்த் சாவந்த் இவ்வாறு பேசியிருந்தால் அவரின் வாயை பாலாசாகேப் உடைத்திருப்பார். பெண்களை மதிக்கத்தவர்களுக்கு வரும் தேர்தலில் பெண்கள் பாடம் புகட்டுவார்கள்" என்று தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News