செய்திகள் (Tamil News)

படம் பிடித்து காட்டுவதால் சினிமா துறையில் பாலியல் தொந்தரவு அதிகமாக தெரிகிறது - கமல்ஹாசன்

Published On 2018-10-15 08:47 GMT   |   Update On 2018-10-15 08:47 GMT
நாங்கள் செய்வதை எல்லாம் நீங்கள் படம் பிடித்து காட்டுவதால் சினிமா துறையில் பாலியல் தொந்தரவு அதிகமாக தெரிகிறது என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறினார். #Metoo #Kamalhaasan
சென்னை:

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

ஒரு பிரச்சினையை எடுத்து வைத்திருக்கிறார்கள். அந்த குற்றச்சாட்டின் மீது ஆராய வேண்டி இருந்தால் ஆராய வேண்டும்.

கேள்வி:- பாலியல் குற்றச்சாட்டுகள் சினிமா துறையில் அதிகமாக வருகிறதே?

பதில்:- சினிமா துறை என்று தனியாக சொல்லாதீர்கள். எல்லா துறைகளிலும் இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டிய வி‌ஷயம். இது வெளிவந்தால் இதுபோன்ற தொந்தரவுகள் இனி இல்லாமல் இருக்கும் என்பதுதான் உலக அளவில் பேசப்பட்டிருக்கிற வி‌ஷயம். ஆனால் இரண்டு தரப்பிலும் நியாயத்தை கேட்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

கே:- மற்ற துறையை விட சினிமா துறையில் பாலியல் பிரச்சினை அதிகமாக இருக்கிறதா?

ப:- நாங்கள் செய்வதை எல்லாம் நீங்கள் படம் பிடித்து காட்டுகிறீர்கள். இதனால் கொஞ்சம் அதிகமாக தெரியலாம்.

கே:- உங்கள் குருமார்கள் எல்லோரும் கம்யூனிஸ்டுவாதிகள் என்பதால் உங்களிடம் கம்யூனிஸ்டு பார்வைதான் இருக்கும் என்று பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளாரே?

ப:- எனது குரு காந்தியும் தான். அவர் கம்யூனிஸ்டு என்றால் நானும் அப்படியே இருந்து விட்டு போவதில் எனக்கு எந்தவிதமான அருவெறுப்பும் கிடையாது.

கே:- தேவர்மகன்-2 உங்களுடைய கடைசி படமாக இருக்குமா?

ப:- அப்படி இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

கே:- தேவர்மகன்-2 என்று அரசியலுக்காக படத் தலைப்பு வைத்திருக்கிறீர்களா?

ப:- அப்படி இல்லை. ராஜ் கமலின் 6-வது படத்தை திருப்பி எடுக்கிறேன் என்று சொன்னால் உங்களுக்கு புரியாது. அதற்காக இந்த படத்தின் பெயரை குறிப்பிட வேண்டி இருக்கிறது. படத் தலைப்பு இன்னும் நான் முடிவு செய்யவில்லை. கண்டிப்பாக அந்த பெயர் இருக்காது.

கே:- தரமான வி‌ஷயங்கள் தேவர்மகன்-2வில் இருக்கும் என்று எதிர்பார்க்கலாமா?

ப:- கண்டிப்பாக இருக்கும். எனக்கு ஜாதியில் விருப்பம் கிடையாது. ஜாதி பெயரை ஏன் வைக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். மது ஒழிப்பை படம் எடுத்தால் அதன் மூலக்கரு ஒரு குடிகாரனை பற்றி இருக்கும். அதுதான் அதில் இருக்கிற வி‌ஷயம். இது எல்லா சாதிக்கும் எதிரான படம்தான் நான் எடுக்கும் படங்கள் எல்லாமே அப்படித்தான். உட்கருத்து அதுவாக இருக்கும்.



கே:- விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்பீர்களா?

ப:- வந்தால் வரவேற்போம்.

கே:- 3 நாள் நிகழ்வில் நிறைய மாணவ-மாணவிகளை சந்தித்துள்ளீர்கள். ஆனால் கமல் மாணவ-மாணவிகளை சந்திக்க கூடாது என்று தமிழிசை கூறி இருக்கிறாரே?

ப:- எனக்கும் அவர்களுக்கும் நடக்கும் இந்த உரையாடலை யாரும் தடுக்க முடியாது. அவர்களின் பதட்டம் என்ன என்று எனக்கு புரிகிறது. பதட்டப்பட்டு என்ன பண்ணுவது? எங்களுக்குள் பரஸ்பரமாக நடக்கும் உரையாடல் அற்புதமான உரையாடல். ஒரு மாற்றத்தை கொண்டு வரக்கூடிய உரையாடல். அதனால்தான் அது நடந்து கொண்டிருக்கிறது.

கே:- உங்களின் அரசியல் செயல்பாடுகளை அமைச்சர்கள் விமர்சிக்கிறார்களே?

ப:- முன்னேற்றத்தின் அடையாளம்தான் அது. கவனிக்காமல் விட்டு விட்டால்தான் தப்பு. ரொம்ப கவனிக்கிறார்கள். நான் எது சொன்னாலும் பிரச்சினை செய்து கொண்டிருக்கிறார்கள். அது நல்லது.

கே:- அவர்களின் விமர்சனம் நீங்கள் சரியான பாதையில் செல்வதை காட்டுகிறதா?

ப:- நான் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறேன் என்பதை காட்டுகிறது.

கே:- சபரிமலை கோவிலுக்கு பெண்கள் செல்வதற்கு தொடர்ந்து எதிர்ப்பு வலுக்கிறதே?

ப:- அது இருக்கட்டும். எதிர்ப்பு இருந்தால் இங்குள்ள கோவில்களுக்கு போகட்டும். இது நான் சம்பந்தப்படாத வி‌ஷயம். நான் அங்கு போனது கிடையாது. எனவே அதைப்பற்றி அதிகமாக தெரியாது. வெளியில் இருந்து கேட்ட கதைகள்தான். எல்லா இடங்களிலும் பெண்களுக்கு சமமான இடங்கள் இருக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து. ஆனால் எனது கருத்தை கேட்க வேண்டிய அவசியம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார். #Metoo #Kamalhaasan

Tags:    

Similar News