செய்திகள்

20 தொகுதி இடைத்தேர்தல்: எடப்பாடி பழனிசாமி-ஓபிஎஸ் தலைமையில் நாளை ஆலோசனை

Published On 2018-11-02 06:14 GMT   |   Update On 2018-11-02 06:14 GMT
20 தொகுதிகளிலும் இடைத்தேர்தலை சந்திப்பது தொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது தலைமையில் நாளை ஆலோசனை நடத்தப்படுகிறது. #ADMK #EdappadiPalaniswami #OPanneerSelvam
சென்னை:

எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக செயல்பட்ட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து அந்த தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

அதனுடன் சேர்த்து, தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவால் காலியான திருவாரூர், ஏ.கே.போஸ் மறைவால் காலியான திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இடைத்தேர்தலை சந்திக்க ஆளும் கட்சியான அ.தி.மு.க. தயாராகி வருகிறது.

இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்னதாகவே 20 தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் அதில் இடம்பெற்றுள்ளனர். 20 தொகுதிகளிலும் வெற்றி பெறும் முனைப்பில் அமைச்சர்களும், அ.தி.மு.க. நிர்வாகிகளும் முன்கூட்டியே களம் இறக்கப்பட்டுள்ளனர்.


இந்த நிலையில் 20 தொகுதிகளிலும் இடைத்தேர்தலை சந்திப்பது தொடர்பாக அ.தி.மு.க. சார்பில் நாளை (3-ந்தேதி) ஆலோசனை கூட்டம் நடக்கிறது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது எப்படி? என்பது பற்றி விரிவாக விவாதிக்கப்படுகிறது.

தமிழக அரசின் திட்டங்களை எடுத்துக்கூறி அ.தி.மு.க. நிர்வாகிகள் 20 தொகுதிகளிலும் வெற்றிக்காக கடுமையாக உழைக்க வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட உள்ளது.

இதன்படி 20 தொகுதிகளிலும் அ.தி.மு.க.வின் வெற்றிக்காக அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை தீவிரமாக களம் இறக்க எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் முடிவு செய்துள்ளனர். #ADMK #EdappadiPalaniswami #OPanneerSelvam
Tags:    

Similar News