திண்டுக்கல் அருகே புயல் நிவாரணம் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்
சத்திரப்பட்டி:
திண்டுக்கல் அருகே விருப்பாட்சி கிழக்கு தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர்/ கஜா புயல் மழை பெய்ததில், அப்பகுதியில் இருந்து 9 புளிய மரங்கள் வேருடனும், கிளைகளும் ஒடிந்து, 14 கூரை ஆஸ்பெட்டாஸ், ஓட்டு வீடுகளில் விழுந்து மேற்கூரைகள் சேதமடைந்தது. இதில் உதயக்குமார், தெய்வானை ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
ஆனால் வருவாய்த்துறையினர் இதுவரை அந்த பகுதி மக்களை கண்டுகொள்ளவே இல்லை. இதனால் அவர்கள் குடிநீர், உணவு இன்றி தவித்தனர்.
ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பழனி- திண்டுக்கல் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். அப்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க கோரி கோஷம் போட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்த ஒட்டன்சத்திரம் தாசில்தார் லீலாரெஜினா, சத்திரப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர்அமுதா, மண்டல துணை தாசில்தார் சசி, விருப்பாட்சி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சந்திரன் ஆகியோர் பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததால் மறியல் கைவிடப்பட்டது.