தேர்தல் தேதி அறிவித்தபிறகு கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் - வேல்முருகன்
இண்டூர்:
தருமபுரி மாவட்டம் இண்டூரில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்ட அந்த கட்சியின் நிறுவன தலைவர் வேல்முருகனிடம் யாருடன் கூட்டணி அமைப்பீர்கள் என்று நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-
தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவராக உள்ள நான், 150க்கும் மேற்பட்ட தமிழக அமைப்புகள், தமிழர் இயக்கங்கள், பெரியார் உள்ளிட்ட அமைப்புகளின் மாநில ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளேன். எங்களுக்கு என்று குறைந்தபட்ச செயல்திட்டங்கள் உண்டு. எங்கள் திட்டங்களையும், கோரிக்கைகளையும் ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிடுவதா? அல்லது ஆதரவு கொடுப்பதா என்பது குறித்து பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவித்தபிறகு எங்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் முடிவெடுத்து அறிவிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் 60 ஆயிரம் பேருக்கு பணி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் ஒரு தமிழனுக்கு கூட பணி வாய்ப்பு இல்லை.அனைவரும் வடநாட்டைச் சேர்ந்தவர்கள். மத்திய அரசு பணி தமிழர்களுக்கு எட்டாக்கனியாகவே உள்ளது.
யூ.பி.எஸ்.சி. தேர்வில் கோடிக்கணக்கில் ஊழல் நடைபெறுகிறது. கேள்வித்தாள்களை தனியாரிடம் விடுவதிலும் முறைகேடு நடைபெறுகிறது. எனவே தமிழ்நாட்டில் மத்திய அரசு பணிகளில் 90 சதவீதம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள அலுவலகங்களில் 100 சதவீத பணியை தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கே வழங்கவேண்டும். தமிழக அரசு ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் சட்டம் இயற்றி உள்ளதைப் போல வேலை உறுதி அளிப்பு சட்டம் இயற்ற வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி வரும் 28-ந் தேதி கோட்டையை நோக்கி பேரணி செல்ல உள்ளோம்.
ராஜீவ்காந்தி வழக்கில் 7 பேரின் விடுதலையில் கவர்னர் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை மீறி நடந்துகொள்கிறார். தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இல்லையேல் தொடர்ந்து போராடுவோம். மத்திய அரசின் பட்ஜெட் மக்கள் நலனில் அக்கறை இல்லாத பட்ஜெட். எனவே தமிழக அரசின் பட்ஜெட் மக்கள் நலனை கருத்தில் கொண்டதாக அமைய வேண்டும்.
தர்மபுரி-மொரப்பூர் ரெயில் பாதை திட்டம் தேர்தல் அறிவிக்கும் போது மட்டும் அறிவிப்பு வரும். அதற்கு இனிப்பு வழங்கி பட்டாசு வெடிக்கின்றனர். இதைச் செய்யாமல் கோரிக்கையை நிறைவேற்றினால் நல்லது.
இவ்வாறு அவர் கூறினார். #Velmurugan