டூடோரியலில் படிக்க தாய் அனுமதிக்காததால் மாணவி விஷம் குடித்து தற்கொலை
சேதராபபட்டு:
புதுவையை அடுத்த தமிழக பகுதியான கோட்டக்குப்பம் மொரராஜ் வீதியை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி உமாமகேஸ்வரி. இவர்களது 2-வது மகள் அபர்ணா (வயது19). இவர் கடந்த ஆண்டு அங்குள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு பயின்று தோல்வி அடைந்ததால் டூடோரியலில் சேர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினார். ஆனால் அந்த தேர்வில் அபர்ணா தோல்வி அடைந்தார்.
இதையடுத்து நர்சாக வேண்டுமானால் எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற வேண்டும் என்பதால் மீண்டும் டூடோரியலில் சேர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத விரும்பினார். ஆனால் இதற்கு அவரது தாய் உமாமகேஸ்வரி சம்மதிக்க வில்லை. இதனால் மனமுடைந்த அபர்ணா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
சம்பவத்தன்று கடையில் இருந்து எலிமருந்து (விஷம்) வாங்கி வந்து அபர்ணா வீட்டில் சாப்பிட்டார். இதில் மயங்கி விழுந்த அபர்ணாவை அவரது தாய் உமாமகேஸ்வரி மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி அபர்ணா பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்த புகாரின்பேரில் கோட்டக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.