செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

கரூர் அரசு மருத்துவமனையில் இதுவரை 10,560 பேருக்கு கொரோனா பரிசோதனை

Published On 2020-06-11 08:10 GMT   |   Update On 2020-06-11 08:10 GMT
கரூர் அரசு மருத்துவமனையில், இதுவரை 10,560 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என மருத்துவக்கல்லூரி டீன் தெரிவித்தார்.
கரூர்:

கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, கரூர் மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலேயே கொரோனா வைரசை கண்டறியும் ஆய்வகத்திற்கான அனுமதியை முதல்-அமைச்சர் வழங்கியுள்ளதால், அதிக அளவிலான மாதிரிகளை பரிசோதனை செய்ய வாய்ப்பாக அமைந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இரண்டு பரிசோதனைக் கருவிகள் உள்ளன. ஒரு கருவியில் ஒரு நாளைக்கு சுமார் 250 முதல் 300 மாதிரிகள் வரை பரிசோதனை செய்ய முடியும். ஆய்வகத்தில் சுழற்சி முறையில் மூன்று பகுதி வேளைகளாக பிரித்து, காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை, மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை, இரவு 8 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை என தொழில்நுட்பவியலாளர்கள் மாறி, மாறி பணியாற்றி வருகின்றார்கள்.

கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இதுவரை 10,560 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இங்கு கரூர், திண்டுக்கல், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் 446 பேர் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் வைரஸ் உறுதி செய்யப்பட்ட 236 பேரும், தொற்று அறிகுறிகளுடன் சந்தேகத்தின் அடிப்படையில் அனுமதிக்கப்பட்ட 203 பேரும் என மொத்தம் 439 பேர் குணமடைந்து அவரவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தற்போதைய நிலவரப்படி 7 பேர் மட்டுமே மருத்துவமனையில் கொரோனாவிற்காக சிகிச்சைபெற்று வருகின்றனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 1,000 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் 900 படுக்கைகளில் ஆக்ஸிஜன் அளிக்கும் வசதிகள் உள்ளது. போதிய அளவிலான வென்டிலேட்டர்களும் தயார் நிலையில் உள்ளன. கரூர் மாவட்டத்தை கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாற்ற அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம். பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Similar News