காணும் பொங்கலன்று சென்னையின் முக்கிய சாலைகளில் பைக் ரேசை தடுக்க 25 தனிப்படைகள்
- 16 குதிரைகள் மற்றும் சிறிய அளவிலான 4 சக்கர வாகனங்கள் ஆகியவற்றையும் போலீசார் பாதுகாப்பு பணிக்காக பயன்படுத்த உள்ளனர்.
- மீட்புப் பணிக்காக மோட்டார் படகுகள் மற்றும் 40-க்கும் மேற்பட்ட நீச்சல் தெரிந்த தன்னார்வலர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
சென்னை:
காணும் பொங்கலை முன்னிட்டு சென்னை மயிலாப்பூர், கீழ்ப்பாக்கம், திருவல்லிக்கேணி, தியாகராயநகர், அடையாறு, புனித தோமையார் மலை, பூக்கடை வண்ணாரப்பேட்டை, புளியந்தோப்பு, அண்ணாநகர், கொளத்தூர் மற்றும் கோயம்பேடு ஆகிய இடங்களில் சிறப்பு வாகன தணிக்கை குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. குடி போதையில் வாகனம் ஓட்டி வருபவர்கள் மற்றும் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் 25 சாலை பாதுகாப்பு குழுக்கள் இருசக்கர வாகனத்தில் ரோந்து சென்று பொதுமக்களுக்கு காணும் பொங்கலன்று பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வாகன ஓட்டிகளுக்கு உரிய அறிவுரை மற்றும் தேவையான உதவிகளையும் வழங்குவார்கள். இது மட்டுமின்றி கிண்டி, அடையாறு, தரமணி, நீலாங்கரை, துரைப்பாக்கம் மதுரவாயல் பைபாஸ் சாலை மற்றும் ஜி.எஸ்.டி. ரோடு போன்ற பகுதிகளில் பைக் ரேசை தடுக்க 25 கண்காணிப்பு சோதனை குழுக்கள் தனிப்படைகளாக அமைக்கப்பட்டு உள்ளன. பைக் ரேஸ் சாகசங்களில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
உழைப்பாளர் சிலை மற்றும் காந்தி சிலை அருகில் தற்காலிக காவல் கட்டுப்பாட்டறை அமைக்கப்பட்டுள்ளது. உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை சர்வீஸ் சாலை நுழைவு வாயில்களில் 11 காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கு அவசர மருத்துவ உதவிக்காக 7 ஆம்புலன்ஸ் வாகனங்களில் மருத்துவக் குழுவினர் மற்றும் மீட்புப் பணிக்காக தீயணைப்பு வீரர்கள் அடங்கிய 2 தீயணைப்பு வாகனங்கள் ஆகியவை தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படும்.
இதுதவிர மீட்புப் பணிக்காக மோட்டார் படகுகள் மற்றும் சுமார் 40-க்கும் மேற்பட்ட நீச்சல் தெரிந்த தன்னார்வலர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
16 குதிரைகள் மற்றும் சிறிய அளவிலான 4 சக்கர வாகனங்கள் ஆகியவற்றையும் போலீசார் பாதுகாப்பு பணிக்காக பயன்படுத்த உள்ளனர்.