உள்ளூர் செய்திகள்

மரக்காணம் அருகே கடலில் மாயமான விசைப்படகை 2-ம் நாளாக தேடும் பணி மீனவர்கள் சாலை மறியல்

Published On 2022-09-15 07:25 GMT   |   Update On 2022-09-15 07:25 GMT
  • படகின் உரிமையாளர்கள் மற்றும் மீனவ பொதுமக்கள் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.
  • 2-ம் நாளான இன்றும் கடலில் மூழ்கிய கப்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.

விழுப்புரம்:

மரக்காணம் அருகே கூனிமேடு குப்பம் பகுதியில் கடற்கரை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 50 லட்சம் மதிப்பிலான விசைப்படகு எதிர்பாராத விதமாக கடலில் மூழ்கியது. இதனால் படகின் உரிமையாளர்கள் மற்றும் மீனவ பொதுமக்கள் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர். புதுச்சேரி துறைமுகத்தில் நிறுத்தி வைத்திருந்த இந்த படகு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மரக்காணம் கூனிமேடு குப்பத்திற்கு கொண்டு வந்து கடற்கரை ஓரமாக நிறுத்தி வைத்திருந்தனர். தற்போது இந்த படகு கடலில் மூழ்கியது அங்குள்ள மீனவர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியது.

இதுகுறித்து தகவல் அறிந்த கடலோர காவல் துறை ரோந்து பணி, மரக்கணம் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கடலில் மூழ்கிய கப்பலை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து 2-ம் நாளான இன்றும் கடலில் மூழ்கிய கப்பலை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் இந்த பகுதியில் துறைமுகம் இல்லாத காரணமே படகு கடலில் மூழ்கியது. அதனால் இந்த பகுதியில் துறைமுகம் கட்டித் தரவும் மற்றும் போதுமான வசதி ஏற்படுத்தியும் தரவேண்டுமென இங்குள்ள மீனவ பொது மக்கள் சாலைமறியல் செய்யபோவதாக தெரிவித்தனர். இன்று காலை முதலே சுமார் 500-க்கும் மேற்பட்ட மீனவ பொதுமக்கள் சம்பவ இடத்தில் குவிந்துள்ளனர். இதனை அறிந்த அதிகாரிகள் மற்றும் போலீசார் மீனவ பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.இதனால் அந்த இடம் முழுவதும் பெரும் பரபரப்பாக உள்ளது. எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வண்ணம் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News