வில்லிவாக்கம் மார்க்கெட்டில் மீன் வாங்க வந்த பெண்ணிடம் ஆபாசமாக பேசியதால் மோதல்- 4 பேர் கைது
- சென்னை அயனாவரம் கே.கே.நகர் பகுதியில் வசித்து வருபவர் விஜயகுமார்.
- வில்லிவாக்கம் மீன் மார்க்கெட்டுக்கு சென்று கோட்டை முனியசாமியிடம் ஏன் ஆபாசமாக பேசினீர்கள் என்று கேட்டுள்ளனர்.
சென்னை:
சென்னை அயனாவரம் கே.கே.நகர் பகுதியில் வசித்து வருபவர் விஜயகுமார். இவரது மனைவி காந்தி. இவர் வில்லிவாக்கம் மீன் மார்க்கெட்டுக்கு மீன் வாங்குவதற்காக சென்றார்.
அங்கு கோட்டை முனியசாமி என்ற மீன் வியாபாரியிடம் காந்தி நல்ல மீன்கள் வந்தால் சொல்லுங்கள் என்று கூறியுள்ளார். உடனே மீன் வியாபாரி முனியசாமி காந்தியிடம் செல்போன் எண்ணை கேட்டுள்ளார். இதை தொடர்ந்து காந்தி தனது செல்போன் எண்ணை கொடுத்து விட்டு திரும்பினார்.
இதன் பின்னர் காந்தியின் செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய கோட்டை முனியசாமி நல்ல மீன்கள் வந்துள்ளது என்று கூறி உள்ளார். அப்போது நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள் என்று கூறியதுடன் ஆபாசவார்த்தைகளையும் பேசி உள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த காந்தி இதுபற்றி கணவர் விஜயகுமாரிடம் முறையிட்டு உள்ளார்.
இதையடுத்து இருவரும் வில்லிவாக்கம் மீன் மார்க்கெட்டுக்கு சென்று கோட்டை முனியசாமியிடம் ஏன் ஆபாசமாக பேசினீர்கள் என்று கேட்டுள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த கோட்டை முனியசாமி, கணவன்-மனைவி இருவரிடமும் தகராறில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக 3 பேரும் வந்துள்ளனர். பின்னர் கோட்டை முனியசாமி உள்பட 4 பேரும் சேர்ந்து கொண்டு விஜயகுமாரையும், காந்தியையும் சரமாரியாக மீன் வெட்டும் கத்தியால் தாக்கியுள்ளனர். பிளாஸ்டிக் பெட்டிகளை கொண்டும் சரமாரியாக அடித்துள்ளனர்.
இதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. இது பற்றி விஜயகுமார் ராஜமங்கலம் போலீசில் புகார் அளித்தார். பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மீன் மார்க்கெட்டுக்கு நேரில் சென்றும் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் கணவன்-மனைவியை தாக்கிய குற்றத்துக்காக கோட்டை முனியசாமி, திருகண்ணன், விஜய்சங்கர், காளிதாஸ் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
இவர்களில் கோட்டை முனியசாமி லட்சுமிபுரத்தை சேர்ந்தவர். திருகண்ணன், விஜய்சங்கர் இருவரும் கொளத்தூரை சேர்ந்தவர்கள் ஆவர். காளிதாசின் சொந்த ஊர் கமுதி. 4 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.