சென்னையில் 43 ஆயிரம் வாகனங்களின் பதிவு எண் பலகைகள் அகற்றப்பட்டன- 3 வாரத்தில் போலீஸ் அதிரடி நடவடிக்கை
- சரியான வாகன எண் பலகை பொருத்தாமல் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது 4,132 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
- வீண் அபராதத்தையும் தவிர்க்க, அனைவரும் தங்களின் முறையற்ற வாகன எண் தகடுகளை சரி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
சென்னை:
சென்னையில் முறையான பதிவு எண்கள் பொறிக்காத வாகன பதிவு எண் பெயர் பகைகள் அகற்றப்பட்டு வருகின்றன.
இது தொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல் துறையினர் வாரந்தோறும் முறையற்ற வாகன பதிவு எண் இல்லாத வாகனங்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
கடந்த 3 வாரங்களில் சுமார் 43 ஆயிரம் வாகனங்களை சரிசெய்து முறையான எண் பொறுத்தப்பட்டுள்ளது.
சரியான வாகன எண் பலகை பொருத்தாமல் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது 4,132 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
3 நாட்களுக்குள் அபராதம் செலுத்துமாறு வழக்குப் பதிவு செய்த அதிகாரியின் வாட்ஸ்அப் எண்ணுக்கும், காவல் நிலைய மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்புமாறு அறிவுறுத்தி, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் துண்டு அறிக்கை ஒட்டப்பட்டன.
இந்த துண்டு அறிக்கையை வாகன ஓட்டிகள் படித்து அறிந்து எண்ணை சரி செய்து அனுப்பி வைக்கவும், அதற்குண்டான அபராத தொகையை செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டது. தவறும் பட்சத்தில் அவருக்கு ரூ.1500 என விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
தங்களது சவுகரியத்தையும் வீண் அபராதத்தையும் தவிர்க்க, அனைவரும் தங்களின் முறையற்ற வாகன எண் தகடுகளை சரி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.