திண்டிவனம் அருகே தேனீக்கள் கொட்டி 50 பெண்கள் காயம்
- இன்று காலை காட்டுச் சிவிரி ஏரிக்கரையில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிந்து வந்துள்ளனர்.
- அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள காட்டுச்சிவிரி கிராமத்தில் ஏராளமான பெண்கள் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர். இன்று காலை காட்டுச் சிவிரி ஏரிக்கரையில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிந்து வந்துள்ளனர். அப்போது புதர் பகுதியை தூய்மை செய்ய முயன்றுள்ளனர். அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக அங்கு இருந்து வெளியேறிய விஷ தேனீக்கள் அங்கு பணிபுரிந்து வந்த பெண்களை விரட்டி விரட்டி கொட்ட ெதாடங்கியது.இதில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் தேனீக்கள் கொட்டியதால் காயமடைந்துள்ளனர்.இதன் காரணமாக அவர்கள் வலி தாங்க முடியாமல் அலற தொடங்கினர்.
சில பெண்கள் மயக்கம் அடைந்து விழுந்தனர்.இதையடுத்து உடனடியாக அருகில் இருந்தவர்கள் அனைவரையும் மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச் சம்பவம் தொடர்பாக வருவாய் துறையினர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.திண்டிவனம் அரசு மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி இல்லாததால் படுக்கை கிடைக்காமல் காயமடைந்தவர்கள் அவதி அடைந்து வருகின்றனர். 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றிய 50-க்கும் மேற்பட்ட பெண்கள் விஷத்தேனீக்கள் கொட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.