தூத்துக்குடியில் ரூ.44 லட்சம் மதிப்பில் 6 மின்மாற்றிகள் - அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்
- தூத்துக்குடி என்.ஜி.ஓ காலனி பகுதியில் ரூ.6 லட்சத்து 9 ஆயிரம் செலவிலும், ராஜகோல்நகர் பகுதியில் ரூ.7 லட்சத்து 72 ஆயிரம் செலவிலும் மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளன.
- சிறப்பு அழைப்பாளராக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு புதிய மின்மாற்றிகளை திறந்து வைத்தார்
தூத்துக்குடி:
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மின்சார வினியோ கத்தில் உள்ள பிரச்சினைகளை களைய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
புதிய மின்மாற்றிகள்
அதன்படி தூத்துக்குடியில் புதிதாக 6 மின்மாற்றிகள் அமைக்கப்பட்டு உள்ளன. தூத்துக்குடி என்.ஜி.ஓ காலனி பகுதியில் ரூ.6 லட்சத்து 9 ஆயிரம் செலவிலும், ராஜகோல்நகர் பகுதியில் ரூ.7 லட்சத்து 72 ஆயிரம் செலவிலும், பால்பாண்டிநகர் பகுதியில் ரூ.8 லட்சத்து 65 ஆயிரம் செலவிலும், கோக்கூர் ரோட்டில் ரூ.7 லட்சத்து 60 ஆயிரம் செலவிலும், மினிசகாயபுரத்தில் ரூ.7 லட்சத்து 23 ஆயிரம் மதிப்பிலும், பொன்சுப்பையாநகரில் ரூ.6.63 லட்சம் செலவிலும் என மொத்தம் ரூ.43 லட்சத்து 92 ஆயிரம் செலவில் 6 புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
திறப்பு விழா
இதன் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது. நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு புதிய மின்மாற்றிகளை திறந்து வைத்தார். அப்போது, அந்த பகுதி மக்கள் மின்சார பிரச்சினையை தீர்த்து வைத்ததற்காக அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா, மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், செயற்பொறியாளர்கள் ராம்குமார், முத்துராஜ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.