கரையிருப்பில் இருந்து தச்சநல்லூர் பைபாசுக்கு இணைப்பு சாலை அமைக்க வேண்டும்-தி.மு.க. நெசவாளர் அணி செயலாளர் மனு
- கரையிருப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர்.
- பெரும்பாலும் ரெயில்வே கேட் மூடப்பட்டே இருப்பதால் பொதுமக்கள் சிரமம் அடைகின்றனர்.
நெல்லை:
தி.மு.க. மாநில நெசவாளர் அணி செயலாளர் பெருமாள், தமிழக அரசு சட்டமன்ற மதிப்பீட்டுக்குழு தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ.விடம் மனு அளித்தார். அவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நெல்லை மாநகராட்சி 2-வது வார்டுக்குட்பட்ட கரையிருப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர். இங்கு நெல்லை விதை ஆராய்ச்சி மையம் சுமார் 100 ஏக்கரில் உள்ளது. இங்குள்ள அமிர்தம்மாள் உயர்நிலைப்பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.
இதனை சுற்றியுள்ள கிராமங்களில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள் பணி நிமித்தமாக மதுரை சாலைக்கு வந்து தான் பஸ் ஏறவேண்டிய நிலை உள்ளது. இந்த சாலையில் ரெயில்வே தண்டவாளம் குறுக்காக உள்ளது. இந்த வழித்தடம் வழியாக சென்னை செல்லும் அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களும் செல்கின்றன. இதனால் பெரும்பாலும் ரெயில்வே கேட் மூடப்பட்டே காட்சியளிக்கிறது.
இதனால் இந்த பாதையை பயன்படுத்தும் பொதுமக்கள் சிரமம் அடைகின்றனர். எனவே அமிர்தம்மாள் பள்ளி அருகில் இருந்து தச்சநல்லூர் பைபாஸ் சாலைக்கு இணைப்பு சாலை அமைத்து கொடுத்தால் கரையிருப்பு, குறிச்சிகுளம், சுந்தராபுரம், செட்டிகுளம் கிராம மக்கள் பயன் அடைவார்கள்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.