உள்ளூர் செய்திகள்

தூய்மை பணியாளர்களுக்கு ஜோதி அறக்கட்டளை சார்பில் அசைவ விருந்து வழங்கப்பட்டது.

தீபாவளி குப்பைகள் அகற்றிய தூய்மை பணியாளர்களை பாராட்டி ஓட்டலில் அசைவ விருந்து

Published On 2023-11-15 09:45 GMT   |   Update On 2023-11-15 09:45 GMT
  • தஞ்சாவூர் மாநகரில் மட்டும் சுமார் 600 டன் குப்பைகள் தேங்கியதை தூய்மை பணியாளர்கள் விரைந்து அகற்றினர்.
  • தஞ்சை அமைந்துள்ள பிரபல தனியார் உயர்தரஅசைவ உணவகத்துக்கு அழைத்து அவர்களுக்கு பிரியாணி விருந்து பரிமாறப்பட்டது

தஞ்சாவூர்:

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கடந்த ஞாயிறு அன்று கோலாகலாமாக கொண்டப்பட்டது.

தஞ்சாவூரில் போடப்பட்டி ருந்த தற்காலிக கடைகள் மூலமாகவும் பொதுமக்கள் பட்டாசு வெடித்ததாலும் ஆங்காங்கே தேங்கிய டன் கணக்கிலான குப்பைகளை அகற்றும் நடவடிக்கையில் நூற்றுக்கணக்கான தஞ்சை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர்.

மொத்தத்தில் தஞ்சாவூர் மாநகரில் மட்டும் சுமார் 600 டன் குப்பைகள் தேங்கியதை தூய்மை பணியாளர்கள் விரைந்து அகற்றினர் .

இந்நிலையில் போர்கால நடவடிக்கையாக விரைந்து குப்பைகளை அகற்றி நகரை தூய்மைப்படுத்திய தூய்மை பணியாளர்களை கவுரவிக்கும் வகையில் ஜோதி அறக்கட்டளை சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு அசைவ விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது .

இதன்படி சுமார் 100 தூய்மை பணியாளர்கள் அவர்களுக்காகவே ஏற்பாடு செய்யப்பட்ட தனி வாகனத்தில் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே அமைந்துள்ள பிரபல தனியார் உயர்தர அசைவ உணவகத்துக்கு அழைத்து வரப்பட்டு அங்கிருந்த குளிரூட்டப்பட்ட அறையில் அவர்களுக்கு தலைவாழையிலையில் மட்டன், முட்டையுடன் ஆவிபறக்க பிரியாணி விருந்து பரிமாறப்பட்டது .

தூய்மை பணியாளர்களின் சேவையை பாராட்டும் விதமாகவும், அவர்களை கவுரவிக்கும் வகையிலும் அவர்களுக்கு பிரியாணி விருந்து பரிமாறி மரியாதை செய்ததாக ஜோதி அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்தனர் .

இது குறித்து தூய்மை பணியாளர்கள் கூறுகையில், எங்களுக்கு உயர்தர அசைவ உணவகத்தில் அதுவும் குளிரூட்டப்பட்ட அறையில் சுடச்சுட ஆவி பறக்க அசைவ விருந்து பரிமாறப்பட்டது ஆச்சர்யமாக இருந்தது.

தங்களது பிள்ளைகளை கூட இது போன்ற ஹோட்ட லுக்கு அழைத்து வரவில்லை.

இந்த ஓட்டலை நிமிர்ந்து கூட பார்த்ததில்லை.

ஆனால் குப்பை வாரும் எங்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் உணவு அளித்து நல்ல மரியாதை அளித்த ஜோதி அறக்கட்டளை நிர்வாகத்துக்கு நன்றி என்றனர்.

முன்னதாக தூய்மை பணியாளர்களுக்கு பாரம்பரிய முறைப்படி வெற்றிலை, பாக்கு, சந்தனம், குங்குமம், கல்கண்டு சகிதம் பன்னீர் தெளித்து வரவேற்பு அளிக்கப்பட்டது .

இதற்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் பிரபு ராஜ்குமார், மேலாளர் ஞானசுந்தரி, மேற்பார்வையாளர் கல்யாண சுந்தரம் உள்ளிட்டோர் செய்திருந்தனர் .

Tags:    

Similar News