பொதுமக்கள் வசதிக்காக விரைவில் தனி செல்போன் எண் வெளியிடப்படும்- துணை போலீஸ் கமிஷனர் சக்திவேல் தகவல்
- பொதுமக்கள் தங்களது குறைகளுக்காக எந்த நேரத்திலும் என்னை தொடர்பு கொள்ளலாம். இதற்காக தனி செல்போன் எண் விரைவில் வெளியிடப்படும்.
- கஞ்சா விற்பனை, போதை பொருள் கடத்தல் உள்ளிட்ட சம்பவங்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
சென்னை:
சென்னை கொளத்தூர் புதிய துணை கமிஷனராக சக்திவேல் பொறுப்பேற்றுக் கொண்டார்.
சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உளவு பிரிவு துணை கமிஷனராக இருந்த இவர் இடமாறுதலாகி சட்டம்-ஒழுங்கு துணை கமிஷனராகி இருக்கிறார்.
சட்ட விரோத செயல்கள் நடைபெறாத வகையில் உரிய நடவடிக்கை எடுப்பேன் என்றும், ரவுடி கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் துணை கமிஷனர் சக்திவேல் கூறியுள்ளார்.
பொதுமக்கள் தங்களது குறைகளுக்காக எந்த நேரத்திலும் என்னை தொடர்பு கொள்ளலாம். இதற்காக தனி செல்போன் எண் விரைவில் வெளியிடப்படும். பொதுமக்கள் தங்களது குறைகளை மட்டுமின்றி தவறான செயல்கள் நடைபெறுவது தெரிய வந்தால் அதுபற்றியும் தகவல் தெரிவிக்கலாம். கஞ்சா விற்பனை, போதை பொருள் கடத்தல் உள்ளிட்ட சம்பவங்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ரவுடிகளை ஒழிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்த உள்ளேன்.
இவ்வாறு துணை கமிஷனர் சக்திவேல் தெரிவித்தார்.
துணை கமிஷனர் சக்தி வேல் தமிழக காவல் துறையில் பல்வேறு இடங்களில் திறம்பட பணியாற்றி உள்ளார். 2009-ம் ஆண்டு குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று நேரடி டி.எஸ்.பி.யாக பணியில் சேர்ந்த இவர் ஒருவருட பயிற்சிக்கு பின்னர் ஜெயங்கொண்டத்தில் முதலில் பணியமர்த்தப்பட்டார். இதன் பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி.யாக பணிபுரிந்த சக்திவேல், கோவை மாவட்டம் வால்பாறையிலும் பணி புரிந்துள்ளார். 2015-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு இறுதி வரையில் ஊட்டி தேவாலா பகுதியிலும் டி.எஸ்.பி.யாக பணியாற்றியுள்ள சக்திவேல் பின்னர் கூடுதல் டி.எஸ்.பி.யாக பதவி உயர்வு பெற்று சத்தியமங்கலம் எஸ்.டி.எப்.பில் பணியமர்த்தப்பட்டார். இதன் பின்னர் கிருஷ்ணகிரி மற்றும் சேலத்திலும் பணி புரிந்துள்ளார்.
இதைத் தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்ற சக்திவேல் சென்னை மாநகர உளவு பிரிவு துணை கமிஷனராக நியமிக்கப்பட்டார்.
10 மாதங்கள் அங்கு சிறப்பாக பணியாற்றிய அவர் கொளத்தூர் துணை போலீஸ் கமிஷனராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இவரது சொந்த ஊர் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஆகும்.