உள்ளூர் செய்திகள்

சுடுகாட்டிற்கு தனிப்பட்டா வழங்க கோரி மனு அளிக்க வந்த அம்பை பகுதி பொதுமக்கள்.

அம்பை செட்டிமேடு பகுதியில் சுடுகாட்டிற்கு தனி பட்டா வழங்க வேண்டும்- கலெக்டரிடம் கிராம மக்கள் மனு

Published On 2023-07-17 08:42 GMT   |   Update On 2023-07-17 08:42 GMT
  • நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவிலானது நின்ற சீர் நெடுமாறன் என்ற மன்னரின் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது.
  • 2 மாட வீதிகளான தெற்கு மாட வீதியும், மேல மாட வீதியும் தான் உள்ளது.

நெல்லை:

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

நலத்திட்ட உதவிகள்

இதில் கலெக்டர் கார்த்திகேயன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். மேலும் நலிவடைந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கினார்.

சங்கர் நகர் அருகே நாரணம்மாள்புரம் வ.உ.சி. நகரை சேர்ந்த திருமா அழகு என்பவர் தலைமையில் வந்த பொதுமக்கள் அளித்த மனுவில், தாழையூத்து பகுதியை சேர்ந்த ஒரு நபர் சாதி ரீதியான மோதல்களுக்கு வழி வகுப்பதாக கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

சுடுகாட்டுக்கு தனிப்பட்டா

அம்பை தாலுகா செட்டி மேடு மற்றும் மேல ஏர்மாள் புரத்தைச் சேர்ந்த ஏராள மான பொதுமக்கள் திரண்டு வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

மணிமுத்தாறு பேரூராட்சிக்கு உட்பட்ட செட்டிமேடு மற்றும் மேல ஏர்மாள்புரத்தில் நாடார் சமுதாய மக்கள் சுமார் 2 ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நாங்கள் இங்கு உள்ள சுடுகாட்டை கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி வருகின்றோம்.

தற்போது இந்த இடம் புறம்போக்கு என்று கூறி தனி நபர்கள் ஆக்கிரமிக்க முயற்சி செய்கின்றனர். தற்போது அந்த இடத்தில் நன்மை கூடம் சீரமைப்பு பணி நடைபெற்று வரும் நிலையில் அம்பை தாசில்தார் சுமதி சில நாட்களுக்கு முன்பு அங்கு வந்து கட்டுமான பணியை தடுத்து நிறுத்தினார்.

இது தொடர்பாக நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டோம். ஆனால் தனி நபர்களுக்கு அந்த இடத்தை பட்டா போட முயற்சி நடப்பதாக தகவல்கள் தெரிய வந்துள்ளது. எனவே இந்த விஷயத்தில் கலெக்டர் கவனத்தில் எடுத்து சுடுகாட் டிற்கு உரிய அந்த இடத்தை அரசு பதிவேட்டில் ஏற்றி தனி பட்டா வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

பா.ஜனதா மனு

பா.ஜனதா மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி மற்றும் நிர்வாகிகள் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

டவுனில் அமைந்துள்ள நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவிலானது நின்ற சீர் நெடுமாறன் என்ற மன்னரின் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. பழமையான இந்த கோவிலுக்கு 3 மாட வீதிகளும், 4 ரத வீதிகளும் இருக்க வேண்டும்.

சிவாலயம் மற்றும் விஷ்ணு ஆலயம் எல்லாம் ஆகம விதிகளின்படி 3 மாட வீதிகளும், 4 ரத வீதிகளும் அமையும் படி நிர்மானிக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது.

ஆனால் நெல்லையப்பர் கோவிலில் 2 மாட வீதிகளான தெற்கு மாட வீதியும், மேல மாட வீதியும் தான் உள்ளது. வடக்கு மாடவீதியை காணவில்லை. எனவே வடக்கு மாட வீதியை கண்டுபிடித்து வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.

Tags:    

Similar News