உலர் பழக்கடையில் பயங்கர தீ விபத்து- ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்
- கடையிலிருந்து திடீரென கரும்புகை வெளியேறுவதை கண்டு அவ்வழியே சென்ற பொதுமக்கள் ஆத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
- தீ வேகமாக பரவாமல் இருக்க தண்ணீரை பீய்ச்சி அடித்து பொருட்களை அப்புறப்படுத்தினர்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரம் அரங்கபாலா நகர் ஆட்கொல்லி பாலம் அருகே ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான பேரீச்சம்பழம் மற்றும் உலர் பழவகை கடை உள்ளது. இந்த கடையில் பேரீச்சம்பழம் மற்றும் பாதாம், முந்திரி உள்ளிட்ட உலர் பழ வகைகள் மொத்தமாகவும், சில்லைரையாகவும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடை உரிமையாளர் ரவிச்சந்திரன் கோவிலுக்காக வெளியூர் சென்ற நிலையில் கடையில் பணிபுரியும் பணியாளர்கள் வழக்கம்போல் இரவு பணியை முடித்துவிட்டு கடையை பூட்டி விட்டு சென்றனர்.
இன்று காலையில் கடையிலிருந்து திடீரென கரும்புகை வெளியேறுவதை கண்டு அவ்வழியே சென்ற பொதுமக்கள் ஆத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதற்குள் தீ கடை முழுவதும் பரவி கொளுந்து விட்டு எரிந்தது. இதை பார்த்ததும் அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.
இதையடுத்து தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து புகை மூட்டத்துடன் காணப்பட்டது. இதனை தொடர்ந்து தீ வேகமாக பரவாமல் இருக்க தண்ணீரை பீய்ச்சி அடித்து பொருட்களை அப்புறப்படுத்தினர். இருந்தபோதிலும் கம்ப்யூட்டர், ஏ.சி. உள்ளிட்ட சாதனங்கள் உள்பட 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் முழுவதும் எரிந்து சேதமாகின. தீ விபத்து மின் கசிவு காரணமாக ஏற்பட்டிருக்க கூடும் என தீயணைப்பு நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.