சின்னமனூரில் பைக்கில் வந்த தொழிலாளியை தாக்கிய கஞ்சா வியாபாரிகள்
- கஞ்சா வியாபாரிகள் தாக்கியதில் காயம் அடைந்த செல்வமும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
- சின்னமனூர் போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர்.
சின்னமனூர்:
தேனி மாவட்டம் சின்னமனூர் கருங்கட்டான் குளம் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 55). இவர் அதே பகுதியில் சிறிய அளவில் ஓட்டல் கடை நடத்தி வருகிறார்.
நேற்று தனது மோட்டார் சைக்கிளில் சீப்பாலக்கோட்டை மெயின்ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது மின்னல் வேகத்தில் பைக்கில் வந்த 2 வாலிபர்கள் அவர் மீது மோதி கீழே விழ வைத்தனர். அதற்கு செல்வம் பார்த்து வரக்கூடாது என கேட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர்கள் செல்வத்தை தரக்குறவைான வார்த்ததைகளால் திட்டி தாக்க முயன்றனர்.
அவர் தடுத்தபோதும் பைக்கில் விழுந்தவரை காப்பாற்றாமல் சரமாரியாக தாக்கினர். அப்போது அவர்கள் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கஞ்சா பொட்டலங்கள் கீழே விழுந்தது. இதை பார்த்ததும் அங்கிருந்த பொதுமக்கள் கஞ்சா வாலிபர்களை பிடித்து தடுத்தனர். மேலும் இது குறித்து சின்னமனூர் போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர்.
பைக்கில் இருந்து தவறி விழுந்ததாலும் பொதுமக்கள் தாக்கியதாலும் கஞ்சா வாலிபர்களுக்கும் காயம் ஏற்பட்டது. போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் கே.கே.பட்டி மந்தயம்மன் கோவில் தெருவை சேர்ந்த விக்னேஷ் (22), கிருஷ்ணன் வாத்தியார் தெருவை சேர்ந்த நவீன் (22) என தெரிய வந்தது.
இதனையடுத்து போலீசார் அவர்களை மருத்துவ பரிசோதனைக்காக தேனி க.விலக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 100 கிராம் கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
கஞ்சா வியாபாரிகள் தாக்கியதில் காயம் அடைந்த செல்வமும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதனிடையே கஞ்சா வியாபாரிகள் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.