சர்தார் வேதரத்தனம் பெயரில் வேதாரண்யத்தில் இருந்து டெல்லிக்கு வாராந்திர விரைவு ரெயில் இயக்க வேண்டும்
- திருத்துறைப்பூண்டி வழித்தடத்தில் ரெயில் சேவை தொடங்க இருப்பது பாராட்டுக்குரியதாகும்.
- நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டுக்கள்.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்ட ரயில் உபயோகிப்பாளர்கள் சங்க மாவட்ட தலைவர் வக்கீல் நாகராஜன், மாவட்டச் செயலாளர் எடையூர் மணிமாறன் ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவின் தென்கிழக்கு முனையாகவும் பணப்பயிர்கள் செழித்தோங்கும் வேளாண்மைப் பகுதியாகவும் மற்றும் கடல் சார் பகுதியாகவும் விளங்குகின்ற வேதாரண்யம் அகத்தியன்பள்ளியில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கு வருகின்ற 8-ந் தேதி ரெயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
20 ஆண்டுகளுக்குப் பிறகு தொடங்கும் இந்த ரெயில் சேவையால் பலரும் பயன்பெறுவர்.
புகழ் பெற்ற வேதாரண்யம், அகத்தியன் பள்ளி, திருத்துறைப்பூண்டி வழித்தடத்தில் ரெயில் சேவை தொடங்க இருப்பது பாராட்டுக்குரியதாகும். இந்தப் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டுக்கள்.
கன்னியாகுமரி போன்று வேதாரண்யமும் இந்திய நாட்டின் கடைசி எல்லையாக குறிப்பாக தென்கிழக்கு முனையாக, எல்லைப்பகுதியாக சிறப்பிடம் பெற்று இருப்பதால் வட இந்தியாவை யும் தென்னிந்தியாவையும் இணைக்கக்கூடிய வகையில் வேதாரண்யம் அகத்தியன்பள்ளியில் இருந்து சென்னைக்கு தினசரி ரயிலை இயக்குவதற்கும், வேதாரணியம் உப்பு சத்தியாகிரகத்தின் நினைவாக தியாகி சர்தார் வேதரத்தனம் பெயரில் வாரம் இருமுறை வேதாரண்யத்தில் இருந்து புதுடெல்லிக்கு திருத்துறைப்பூண்டி, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், சென்னை வழியாக வருகின்ற ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு விரைவு ரயிலை இயக்குவதற்கு பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.