கோவை தடாகத்தில் சோதனைச்சாவடியை சேதப்படுத்திய காட்டுயானை
- ஒற்றை காட்டு யானை அதிகாலை நேரத்தில் வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
- மாங்கரையில் சிறிது நேரம் அட்டகாசம் செய்த காட்டு யானை மீண்டும் வனத்துக்குள் சென்று மறைந்து விட்டது.
கவுண்டம்பாளையம்,
கோவை மாவட்டத்தில் உள்ள தடாகம், வனப்பகுதியை ஒட்டி அமைந்து உள்ளது. எனவே இங்கு காட்டு விலங்குகள் அடிக்கடி வனத்தில் இருந்து வெளியேறி, ஊருக்குள் நுழைவது வாடிக்கையாக உள்ளது.
இந்த நிலையில் ஒரு காட்டு யானை அதிகாலை நேரத்தில் வனத்தில் இருந்து வெளியே வந்தது. அப்போது அது ஆக்ரோஷமாக காட்சியளித்தது.மாங்கரை குடியிருப்பு பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த காட்டு யானை, அங்கு உள்ள சோதனைச்சாவடியை உடைத்து சேதப்படுத்தியது.
அதன்பிறகு டாஸ்மாக் கடை சுவரையும் தாக்கி இடிக்க முயன்றது. மாங்கரையில் சிறிது நேரம் அட்டகாசம் செய்த காட்டு யானை மீண்டும் வனத்துக்குள் சென்று மறைந்து விட்டது.
கோவை தடாகம் பகுதியில் காட்டு யானைகள் இரவு நேரத்தில் ஊருககுள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்துவது வழக்கம். ஆனால் இந்த ஒற்றை காட்டு யானை அதிகாலை நேரத்தில் ஊருக்குள் வலம் வந்து அட்டகாசம் செய்து விட்டு திரும்பி சென்று உள்ளது. இது அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
எனவே கோவை தடாகம் மாங்கரை பகுதியில் தனியாக வலம் வரும் ஒற்றை காட்டு யானையை வனத்துறை பிடித்து நடுக்காட்டில் கொண்டு சென்று விட வேண்டும் என்று அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.