குடிபோதையில் பெண்ணிடம் ரகளை செய்த தொழிலாளி
- கடந்த சில நாட்களாக குடிமகன்கள் குடித்துவிட்டு போதையில் பஸ் நிலையத்தில் படுத்து உறங்குவதும், ரகளையில் ஈடுபடுவதும் தொடர்கதையாகிவருகிறது.
- பஸ் நிலையத்தில் குடிமகன்களால் தினம் தினம் பெண்கள், பள்ளி மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தாளவாடி:
தாளவாடி மலைப்பகுதியில் சுமார் 60-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன.இப்பகுதி மக்கள் சத்தியமங்கலம், கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர், மைசூர், ஆகிய பகுதிகளுக்குச் செல்ல தாளவாடி பஸ் நிலையம் வந்து தான் செல்ல வேண்டும்.
இதனால் தாளவாடி பஸ் நிலையம் எப்பொழுதும் பரபரப்பாகவே காணப்படும். இந்நிலையில் கடந்த சில நாட்களாக குடிமகன்கள் குடித்துவிட்டு போதையில் பஸ் நிலையத்தில் படுத்து உறங்குவதும், ரகளையில் ஈடுபடுவதும் தொடர்கதையாகிவருகிறது.
அதேபோல் காலை பஸ் நிலையத்தில் ஆண்கள் பெண்கள் என 100-க்கும் மேற்பட்டோர் பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்பொழுது அங்கு வந்த 50 வயது மதிக்கத்தக்க தொழிலாளி ஒருவர் குடிபோதையில் தள்ளாடியபடியே பஸ் நிலையத்தில் நுழைந்தார்.
அங்கு பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் மீது தள்ளாடியபடி விழுந்து தகாத வார்த்தையில் பேசினார்.
பின்னர் அங்கு நின்று இருந்த பெண்ணிடம் தகராறு செய்தார். இதை பார்த்த வயதான மூதாட்டி ஒருவர் குச்சியை எடுத்து அவரை விரட்டினார். ஆனால் போதையில் தள்ளாடியபடியே இருந்தார்.
ஆனால் அங்கு இருந்த மற்றவர்கள் யாரும் இதை கண்டு கொள்ளவே இல்லை.
பஸ் நிலையத்தில் குடிமகன்களால் தினம் தினம் பெண்கள், பள்ளி மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.