நாங்குநேரி அருகே கோவில் கொடை விழாவில் வாலிபருக்கு கத்திக்குத்து
- நாராயணன் தனது உறவினர் சுடருடன் கொடை விழா பார்த்துக் கொண்டிருந்தார்.
- ஸ்ரீராமன் உள்பட மூவரும் சேர்ந்து நாராயணனை கத்தியால் முதுகில் குத்தினர்.
களக்காடு:
நாங்குநேரி அருகே உள்ள ஸ்ரீரெங்கராஜபுரம் வடக்குத் தெருவை சேர்ந்தவர் மத்தியாஸ் மகன் நாராயணன் (வயது25). இவர் மும்பையில் உள்ள கப்பல் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது குடும்பத்தினருக்கும், அதே ஊரைச் சேர்ந்த லெட்சுமணன் குடும்பத்தினருக்கும் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வருகிறது.
இந்நிலையில் ஸ்ரீரெங்கராஜ புரத்தில் உள்ள முத்தாரம்மன் கோவிலில் கொடை விழா நடந்தது. இதற்காக நாராயணன் விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார்.
சம்பவத்தன்று நாராயணன் தனது உறவினர் சுடருடன் கோவில் கொடை விழா பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த லெட்சுமணன் மகன்கள் ஸ்ரீராமன், ஹரிராம், ராமசுந்தரம் மகன் குமார் ஆகியோருக்கும், நாராயண னுக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த ஸ்ரீராமன் உள்பட மூவரும் சேர்ந்து நாராயணனை கத்தியால் முதுகில் குத்தினர். இதனால் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி நாங்குநேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, இதுதொடர்பாக ஸ்ரீராமன் உள்பட 3 பேரையும் தேடி வருகின்றனர்.