உள்ளூர் செய்திகள்

மீட்கப்பட்ட விஷ்ணுராம்

பிரான்மலை பாறையில் சிக்கிய வாலிபர்- இரவு முழுவதும் தவித்தவர் காலையில் மீட்பு

Published On 2022-12-18 10:59 GMT   |   Update On 2022-12-18 10:59 GMT
  • மலைமீது தேடிய கிராமத்து இளைஞர்கள் பாறை இடுக்கில் காயத்துடன் விஷ்ணுராம் இருந்ததை பார்த்தனர்.
  • கிராம இளைஞர்களுக்கு விஷ்ணுராமின் பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.

சிங்கம்புணரி:

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள பொன்னடபட்டியை சேர்ந்த பழனிவேல் மகன் விஷ்ணு ராம் (வயது21). நேற்று மாலை இவர் தாயாரிடம் பிரான்மலைக்கு செல்வதாக கூறிவிட்டு அங்கு மலை மேல் உள்ள கொடுங்குன்ற நாதரை தரிசனம் செய்ய தனியாக சென்றார். பொழுது சாய்ந்த நேரத்தில் பாதை தெரியாமல் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்ற விஷ்ணுராம், அங்குள்ள பாறையில் வழுக்கி புதருக்குள் விழுந்தார்.

அங்கிருந்து தாயாருக்கு பாதை மாறி சென்றுவிட்டதாக செல்போன் மூலம் குறுந்தகவல் அனுப்பினார். மேலும் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் ஆகியது. குறுந்தகவலை பார்த்த தாயார் உடனடியாக பிரான்மலை ஊருக்குள் வந்து கிராம மக்களிடம் மகன் காணாமல் போன விவரத்தை கூறி அழுதார். இதையடுத்து பிரான்மலை, மற்றும் பாப்பாபட்டியை சேர்ந்த இளைஞர்கள் மலையில் ஏறி இரவு முழுவதும் வாலிபர் விஷ்ணுராமை தேடினர்.

அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியாததால் இரவில் திரும்பி விட்டனர்.இன்று காலை மீண்டும் கிராமத்து இளைஞர்கள் மலைமீது தேடியபோது பாறை இடுக்கின் இடையே தலையில் காயத்துடன் விஷ்ணுராம் இருந்ததை பார்த்தனர். பின்னர் அவரை பத்திரமாக மீட்டு மலையை விட்டு இறங்கினர். காயமடைந்த விஷ்ணுராமை உடனடியாக பிரான்மலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

சுமார் 2,500 அடி உயரம் உள்ள பிரான்மலையில் நேரம், காலம் பார்க்காமல் மாலையில் இருந்து இன்று காலை வரை தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பாப்பாபட்டி கிராம இளைஞர்களுக்கு விஷ்ணுராமின் பெற்றோர் ஆனந்த கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் பிரான்மலை மற்றும் சுற்று வட்டார கிராம பகுதிகளில் பரபரப்பு காணப்பட்டது. 

Tags:    

Similar News