நெல்லை டவுனில் மூதாட்டியை தாக்கி 25 பவுன் நகை பறித்த வாலிபர் கைது
- வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் தலையணையை எடுத்து கோமதி முகத்தில் வைத்து அமுக்கினார்.
- மூதாட்டிக்கு கைதான வாலிபர் அவ்வப்போது சென்று மருந்து- மாத்திரைகள் வாங்கி கொடுத்து வந்துள்ளார்.
நெல்லை:
நெல்லை டவுன் பெரியதெருவை சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மனைவி கோமதி (வயது 82). கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் ராமசாமி தனது மகனுடன் உயிரிழந்தார்.
25 பவுன் நகை கொள்ளை
இதனால் கோமதி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். அவருக்கு அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் அவ்வப்போது உதவி செய்து வருகின்றனர். கடந்த 17-ந்தேதி இரவில் கோமதி வீட்டில் இருந்தார்.
அப்போது, வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் திடீரென்று வீட்டின் முன்பக்க கதவை அடைத்து விட்டு, அங்கிருந்த தலை யணையை எடுத்து கோமதி முகத்தில் வைத்து அமுக்கினார். மேலும், அவர் வைத்திருந்த நகைகளை தரும்படி மிரட்டினார்.
திடீரென கோமதியை தாக்கிவிட்டு அவர் வைத்திருந்த 25 பவுன் நகைகளை மர்மநபர் கொள்ளையடித்துவிட்டு வீட்டின் பின்பக்க வாசல் வழியாக தப்பிச் சென்று விட்டார்.
வாலிபர் கைது
இதுகுறித்து நெல்லை டவுன் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஷிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில் வாலிபர் ஒருவர் மட்டும் தான் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அதில் மூதாட்டியிடம் நகையை திருடிய நபர், டவுனில் மூதாட்டி வசிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர் என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து நகைகளை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில், மூதாட்டிக்கு கைதான வாலிபர் அவ்வப்போது சென்று மருந்து- மாத்திரைகள் வாங்கி கொடுத்து வந்துள்ளார். அப்போது மூதாட்டியிடம் பணம் மற்றும் நகைகள் இருப்பது தெரியவந்தது.
இதனால் நகைகளை திருடி அதன்மூலம் கடனை அடைக்க வாலிபர் திட்டமிட்டுள்ளார். இதற்காக மூதாட்டிக்கு தெரியாமல் அவரது பீரோ சாவியை எடுத்து கள்ளச்சாவி தயாரித்து உள்ளார். அதனை கொண்டு சம்பவத்தன்று நகைகளை கொள்ளையடித்தார். அப்போது மூதாட்டி அதனை பார்த்தததால் தலையணையை கொண்டு அவரது முகத்தை அமுக்கி தாக்கியதும் தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.