உள்ளூர் செய்திகள்

ஆடிப்பெருக்கு-அமாவாசை நாளில் ஆறுகளில் குளிக்க கட்டுப்பாடு

Published On 2024-08-01 04:27 GMT   |   Update On 2024-08-01 04:27 GMT
  • பொது மக்களுக்கு எச்சரிக்கை குறுந்தகவல்கள்.
  • பொதுமக்கள் கூட்டமாக தண்ணீரில் இறங்கி குளிப்பதைத் தவிா்க்க வேண்டும்.

சென்னை:

மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி வழியாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா நேற்று ஆலோசித்தாா். அப்போது அவர் மாவட்ட கலெக்டர்களுக்கு சில உத்தரவுகளை பிறப்பித்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருவதால், நிலச்சரிவு ஏற்படாமல் இருக்க தேவையான அனைத்து ஆயத்த நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். மழைக் காலத்தில் மலை பகுதியில் உள்ள இடங்களுக்கு வருவதைத் தவிா்க்க வேண்டும் என்று பொது மக்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் ஊடகங்கள் வாயிலாக அறிவுரைகள் வழங்க வேண்டும்.

பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளைக் கண்டறிந்து, மீட்பு, நிவாரணப் பணிகளுக்காக பல்துறை மண்டலக் குழுக்களை முன்கூட்டியே நிலைநிறுத்த வேண்டும். நிலச்சரிவால் பாதிக்கப்படக்கூடிய சாலைப் பகுதிகளை நெடுஞ்சாலைத் துறையினா் கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், பொது மக்களுக்கு எச்சரிக்கை குறுந்தகவல்கள் அனுப்ப வேண்டும்.

நிலச்சரிவு மற்றும் மழை காரணமாக விழும் மரங்களை அகற்றுவதற்குத் தேவையான உபகரணங்கள் தயாா் நிலையில் வைக்க வேண்டும். தமிழ்நாடு பேரிடா் மீட்புப் படை, தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் சேவையினையும் பயன்படுத்தி மீட்பு, நிவாரணப் பணிகளை துரிதப் படுத்த வேண்டும்.

தேவைப்படும் சூழலில் அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து நீலகிரி மற்றும் கோயம்புத்தூா் மாவட்டங்களுக்கு தீயணைப்பு படை வீரா்களை அனுப்பி வைக்க வேண்டும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூா் மாவட்டங்களுக்கு தேசிய பேரிடா் மீட்புப் படையின் 2 குழுக்களை உடனடியாக அனுப்பி வைக்கவும், சாலை சீரமைப்பு பணிகளை கண்காணிக்க, நீலகிரி மாவட்டத்துக்கு நெடுஞ்சாலைத் துறை செயற்பொறியாளா்களை அனுப்பி வைக்க வேண்டும்.

மேட்டூா் நீா்த்தேக்கத்தில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீா் திறந்து விடப்படுகிறது. ஆறுகள், கால்வாய்களில் அதிக வெள்ளம் ஏற்படக்கூடும் என்பதால் பொதுமக்கள் நீரில் இறங்குவதைத் தவிா்க்க வேண்டும் என அறிவுரை வழங்க வேண்டும்.

தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஆடிப் பெருக்கு மற்றும் ஆடி அமாவாசையின்போது, பொதுமக்கள் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே நீராட அனுமதிக்க வேண்டும். அத்தகைய இடங்களில் பொதுமக்கள் கூட்டமாக தண்ணீரில் இறங்கி குளிப்பதைத் தவிா்க்க போதுமான தடுப்புகள் ஏற்படுத்தி, காவலா்களை பணியமா்த்த வேண்டும். மேலும், மீட்புப் பணிகள் மேற்கொள்ளவும், அசம்பாவிதங்களைத் தவிா்க்கவும் நீச்சல் வீரா்கள் மற்றும் மீனவா்களை நிலைநிறுத்த வேண்டும்.

ஆபத்தான மற்றும் அபாயகரமான இடங்களில் ஆறுகள், கால்வாய்களில் மக்கள் செல்வதைக் கட்டுப் படுத்த மாவட்ட நிா்வாகம் ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும். வெள்ளம் செல்லும் தாழ்வான பாலங் கள் மற்றும் தரைப்பாலங்களில் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News