உள்ளூர் செய்திகள்

வடமாநிலத்தினர் பணம் பறித்ததாக சமூகவலை தளங்களில் வீடியோ பதிவிடும் நபர்கள் மீது நடவடிக்கை- போலீசார் எச்சரிக்கை

Published On 2023-02-02 12:23 GMT   |   Update On 2023-02-02 12:24 GMT
  • வடநாட்டில் இருந்து வருபவர்கள், பணியாற்றும் கம்பெனிகளிலும் மற்றும் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியும் வசித்து வருகின்றனர்.
  • வதந்தியை சமூக வலைதளங்களில் பரப்பியவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

திருப்பூர்:

திருப்பூரில் பனியன் கம்பெனிகள் மற்றும் அதனை சார்ந்த தொழில் நிறுவனங்களில் வடமாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பேர் பணிபுரிந்து வருகின்றனர். அதே போன்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களும் பணி செய்து வருகின்றனர். வடநாட்டில் இருந்து வருபவர்கள், பணியாற்றும் கம்பெனிகளிலும் மற்றும் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியும் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 14 ந்தேதி திலகர் நகர் பகுதியில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் பணியாற்றும் வடமாநிலத்தை சேர்ந்த சில வாலிபர்கள் தமிழ்நாட்டை சேர்ந்த வாலிபர்களை துரத்தி தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக பீகாரைச் சேர்ந்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த பரபரப்பு இன்னும் தீராத நிலையில் கடந்த 29 ந்தேதி திருப்பூர் மாஸ்கோ நகரில் நடந்த நிகழ்ச்சியில் வடமாநில வாலிபர்கள் பாக்கு போட்டு எச்சிலை அருகில் உள்ளவர்கள் மீது உமிழ்வதாக கூறி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து வடக்கு காவல் நிலைய போலீசார் துரித நடவடிக்கை எடுத்து இரு தரப்பு மோதலையும் தடுத்தனர்.

இந்நிலையில் வட மாநிலத்தவர்கள் தொடர்பான இன்னொரு சம்பவ வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரை அடுத்த நியூ திருப்பூர் அருகே பொங்குபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பரமசிவம்பாளையத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். கடந்த 29ந்தேதி அதே பகுதியை சேர்ந்த ஒருவர் தனது மகளை பள்ளியில் இருந்து அழைத்து வர மோட்டார் சைக்கிளில் அந்த வழியாக சென்றுள்ளார். அப்போது வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் மீது எதிர்பாராத வகையில் மோதியுள்ளது. இதையடுத்து அங்கு திரண்ட வடமாநில கும்பல் வாகனத்தின் சாவியை பிடுங்கி கொண்டு தகராறில் ஈடுபட்டுள்ளது. இதனால் திருப்பூரை சேர்ந்த அந்த நபர் மன்னிப்பு கேட்டு விட்டு தனது மகளுடன் மோட்டார் சைக்கிளை மீட்டு சென்றதாக தெரிகிறது. இந்த சம்பவத்தை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். அது இப்போது வைரலாகியுள்ளது. இது குறித்து பெருமாநல்லூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் பொய்யான வதந்திகளை நம்ப வேண்டாம் என திருப்பூர் காவல்துறையினர் விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொங்குபாளையம் ரோட்டில் 3 நாட்களுக்கு முன்புசாலையில் நடந்த சிறிய வாகன விபத்து தொடர்பாக வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த சம்பவத்தில் சம்பத்குமார் என்பவர் இரண்டு சக்கர வாகனத்தில் செல்லும் போது, பொங்குபாளையம் ரோட்டில் வடமாநில தொழிலாளர் மீது இடித்ததில் கீழே விழுந்தவரின் செல்போன் சேதடைந்துள்ளது. அதை சரிசெய்ய பண உதவி கேட்டுள்ளார். அதை சம்பத்குமார் கொடுத்து விட்டு வந்துள்ளார். இதை அவரே வாக்குமூலமாக அளித்துள்ளார்.

இதனை சமூக வலைதளங்கள் மற்றும் வாட்ஸ் அப் குழுக்களில் பைக்கை பிடுங்கி அட்டகாசம் தமிழரை சுற்றி வளைத்து பணம் பறித்த வடமாநில கும்பல் என தவறான பதிவுகளை பரப்புகிறார்கள். இந்த வதந்தியை நம்ப வேண்டாம். அது பொய்யானது. இவ்வாறு வதந்தியை சமூக வலைதளங்களில் பரப்பியவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News