நாங்குநேரி- பணகுடி இடையே நான்கு வழிச்சாலையோரம் கேரளா கழிவுகள் கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- கலெக்டர் அலுவலகத்தில் காங்கிரசார் மனு
- கேரளாவில் இருந்து வருகின்ற கனரக வாகனங்களில் மருத்துவ கழிவுகளை ஏற்றி வந்து சாலை ஓரங்களில் கொட்டி வருகின்றனர்.
- கழிவுகளை கொட்டும் டிரைவர்கள், உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நெல்லை:
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் வக்கீல் காமராஜ் தலைமையில் நெல்லை கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் போத்திராஜ் வினோத் மற்றும் நிர்வாகிகள் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இன்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நெல்லை மாவட்ட எல்லையான காவல் கிணறு இஸ்ரோவில் இருந்து பணகுடி செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும், வாகைகுளம் மற்றும் நாங்குநேரி செல்லும் வழி ஆகிய இடங்களிலும் நான்கு வழி சாலைகளில் கேரளாவில் இருந்து வருகின்ற பெரும்பாலான கனரக வாகனங்களில் கோழி இறைச்சி, மீன் கழிவு, மருத்துவ கழிவுகளை ஏற்றி வந்து சாலை ஓரங்களில் கொட்டி வருகின்றனர்.
இந்த பகுதியில் தினமும் ஆயிரக்கணக்கானோர் கடந்து செல்லும் நிலையில் துர்நாற்றம் ஏற்பட்டு அவர்களுக்கு உடல் ரீதியில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து கேரளா கழிவுகளை கொண்டு வந்து கொட்டும் டிரைவர்கள் மற்றும் அதன் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். லாரிகளையும் பறிமுதல் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.