காந்தி ஜெயந்தி விடுமுறை அளிக்காத 105 நிறுவனங்கள் மீது நடவடிக்கை- நெல்லை தொழிலாளர் உதவி ஆணையர் தகவல்
- தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டப்படி, தொழில் நிறுவனங்களில் தேசிய விடுமுறை நாளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுமுறை அளிக்க வேண்டும்.
- முறைப்படி தகவல் தெரிவிக்காமல், தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி இருந்தால் அந்த நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்குமாறு, சென்னை அரசு முதன்மை செயலாளரும் தொழிலாளர் ஆணையருமான அதுல் ஆனந்த் உத்தரவிட்டிருந்தார்.
நெல்லை:
தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டப்படி, தொழில் நிறுவனங்களில் தேசிய விடுமுறை நாளில் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் பீடி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுமுறை அளிக்க வேண்டும். மேலும் இதுதொடர்பான விவரங்களை சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர், தொழிலாளர் துணை ஆய்வர்கள், உதவி ஆய்வாளர்களுக்கு 24 மணி நேரத்துக்கு முன்பாக தெரிவிக்க வேண்டும்.
அவ்வாறு முறைப்படி தகவல் தெரிவிக்காமல், தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி இருந்தால் அந்த நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்குமாறு, சென்னை அரசு முதன்மை செயலாளரும் தொழிலாளர் ஆணையருமான அதுல் ஆனந்த், மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் குமரன் மற்றும் நெல்லை தொழிலாளர் இணை ஆணையர் சுமதி ஆகியோர் உத்தரவிட்டிருந்தனர்.
அதன்படி தேசிய விடுமுறை நாளான கடந்த 2-ந்தேதி காந்தி ஜெயந்தி அன்று நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் நெல்லை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) முருகப்பிரசன்னா தலைமையில் துணை ஆய்வர்கள், உதவி ஆய்வர்களுடன் கூட்டா்வு நடத்தப்பட்டது. 79 கடைகள், நிறுவனங்கள், 57 உணவு நிறுவனங்கள், 15 மோட்டார் நிறுவனங்கள், 15 பீடி நிறுவனங்கள் என மொத்தம் 166 நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் 105 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த தகவலை நெல்லை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) முருகப்பிரசன்னா தெரிவித்து உள்ளார்.