உள்ளூர் செய்திகள்

நடிகை கஸ்தூரி முன்ஜாமின் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல்- நாளை விசாரணைக்கு வருகிறது

Published On 2024-11-11 08:22 GMT   |   Update On 2024-11-11 08:22 GMT
  • கஸ்தூரி மீது 6 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டது.
  • அரசியல் உள்நோக்கத்தோடு, என் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை:

பிராமண சமூகத்தின் சார்பில் சென்னை எழும்பூரில் கடந்த 3-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய நடிகை கஸ்தூரி திராவிடர்கள் குறித்தும், தெலுங்கு மக்கள் குறித்தும் அவதூறாக பேசினார். குறிப்பாக, தெலுங்கு மக்கள் குறித்து நடிகை கஸ்தூரி பேசிய கருத்தானது தெலுங்கு அமைப்புகள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து நடிகை கஸ்தூரிக்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து நடிகை கஸ்தூரி தான் பேசிய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து அறிக்கையும் வெளியிட்டிருந்தார். ஆனாலும் பல மாவட்டங்களில் அவர் மீது புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவும் செய்யப்பட்டது. தற்போது அவர் தலைமறைவாக இருக்கிறார்.

இந்நிலையில், மதுரை திருநகரில் நாயுடு மகாஜன சங்கம் அளித்த புகாரில், கஸ்தூரி மீது 6 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமின் கோரி கஸ்தூரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுவினைத் தாக்கல் செய்துள்ளார்.

அதில், "தெலுங்கு மக்கள் குறித்து பேசியதற்கு வருத்தம் தெரிவித்த பின்னரும் அரசியல் உள்நோக்கத்தோடு, என் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நீதிமன்றம் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளுக்கும் கட்டுப்படுகிறேன். ஆகவே, எனக்கு இந்த வழக்கில் போலீசார் கைது செய்யாமல் இருக்க முன் ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும்" என கூறியுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக நாளை விசாரணைக்கு வர உள்ளது.

Tags:    

Similar News