43 நாட்களுக்கு பின் அனுமதி: கும்பக்கரை அருவியில் நீராடி மகிழ்ந்த ஐயப்ப பக்தர்கள்
- தொடர்மழை காரணமாக கடந்த மாதம் 3-ந்தேதி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
- அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே குளிர்ச்சியான ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளித்தனர்.
பெரியகுளம்:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்குதொடர்ச்சி மலையாடிவாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அருவியில் நீர்பிடிப்பு பகுதிகளான வட்டக்காணல், வெள்ளகவி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த தொடர்மழை காரணமாக கடந்த மாதம் 3-ந்தேதி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க வனத்துறையினர் தடைவிதித்தனர். மேலும் அருவியை கண்காணித்து வந்தனர். நீர்வரத்து சீராகாததால் 43 நாட்களாக தொடர்ந்து தடைவிதிக்கப்பட்டது. இந்தநிலையில் இன்று நீர்வரத்து சீரானதால் கும்பக்கரை அருவியில் குளிக்க வனத்துறையினர் அனுமதி வழங்கினர். தற்போது சபரிமலை சீசன் நடைபெற்று வருவதால் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் அதிகாலை முதலே கும்பக்கரை அருவியில் குளித்து மகிழ்ந்தனர். அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே குளிர்ச்சியான ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளித்தனர்.
மேலும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் கும்பக்கரை அருவிக்கு வந்திருந்ததால் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.