அ.தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை: கடலூர் மாவட்ட மீனவ கிராமங்களில் பதட்டம்- போலீஸ் குவிப்பு
- மீனவ கிராமத்தினருக்குள் மோதல் ஏற்பட்ட காரணத்தினால் அ.தி.மு.க. பிரமுகர் பஞ்சநாதன் கொலை செய்யப்பட்டார்.
- கடலூர் நீதிமன்றத்தில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
கடலூர்:
கடலூர் தேவனாம்பட்டினம் மற்றும் சோனாங்குப்பம் மீனவ கிராமத்தினருக்குள் மோதல் ஏற்பட்ட காரணத்தினால் அ.தி.மு.க. பிரமுகர் பஞ்சநாதன் கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் நேற்று கடலூர் நீதிமன்றத்தில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக கடலூர் மாவட்ட மீனவர்கள் இடையே பெரும் பரபரப்பு நிலவியது. இந்த நிலையில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரின் நேற்று முன்தினம் முதல் கடலூர் தேவனாம்பட்டினம், சோனாங்குப்பம், தாழங்குடா, கடலூர் துறைமுகம் மற்றும் சுற்றுவட்டார மீனவ கிராமத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் போலீசாருக்கும், மீனவர்களுக்கும் தள்ளுமுள்ளு மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பெரும் பதட்ட நிலை காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு முதல் மீனவ கிராமத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இதன் காரணமாக மீனவர் கிராம பகுதிகளில் பொதுமக்கள் கும்பலாக கூடுவதற்கு போலீசார் அனுமதி அளிக்காமல் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஆற்று கரையோரம் மற்றும் துறைமுகம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுளுக்கு போலீசார் கூடுதலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும். இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் மீனவ கிராமங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.