உள்ளூர் செய்திகள்

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குழந்தைகள் கல்வி செலவை அ.தி.மு.க. ஏற்கும்-எடப்பாடி பழனிசாமி

Published On 2024-06-20 08:03 GMT   |   Update On 2024-06-20 08:03 GMT
  • புகார் அளித்தும் கள்ளச்சாராய விற்பனையை தடுக்கவில்லை.
  • மக்கள் மீது மு.க.ஸ்டாலினுக்கு அக்கறை இல்லை.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கள்ளக்குறிச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கள்ளக்குறிச்சியில் போலீஸ் நிலையம் பின்புறமே கள்ளச்சாராயம் விற்கப்படுகிறது என்றால் இந்த ஆட்சியின் நிர்வாகம் எப்படி இருக்கிறது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

ஆளும் கட்சியை சேர்ந்த அதிகாரம் மிக்கவர்களே கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டு இருப்பதாக தெரிகிறது. இல்லாவிட்டால் இவ்வளவு துணிச்சலாக நகரத்தின் மையப் பகுதியில் போலீஸ் நிலையத்தின் அருகில் கள்ளச் சாராயம் விற்பனை நடைபெறுமா? இது மக்களிடையே மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிகிச்சையில் இன்னும் எத்தனை பேர் குணமடைவார்கள் என்று தெரியவில்லை. சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முதல் ஒவ்வொருவராக உயிரிழப்பதை பார்க்கும் போது மிகுந்த வேதனையும் அதிர்ச்சியும் அடைகிறேன்.

கள்ளச்சாராயம் குடித்ததில் 100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதிகாரிகளும், அரசு நிர்வாகமும் கள்ளச்சாராய விற்பனையை தடுக்கவில்லை.

செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலர் இறந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கள்ளச்சாராய விற்ப னையை தடுக்க பலமுறை வலியுறுத்தியும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. கள்ளக்குறிச்சி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. புகார் அளித்தும் கள்ளச்சாராய விற்பனையை தடுக்கவில்லை. போலீசார் நடவடிக்கை எடுக்காமல் விட்டதே உயிரிழப்புக்கு காரணம்.

தமிழ்நாடு முழுவதும் போதை மாநிலமாக மாறி வருகிறது. அதை தடுக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கள்ளக்குறிச்சியில் விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோனதற்கு பொறுப்பு ஏற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக பதவி விலக வேண்டும்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு பூத் வாரியாக அமைச்சர்களை நியமித்துள்ளனர். அந்த அக்கறையை கள்ளக்குறிச்சி சம்பவத்தில் காட்டி இருக்கலாம்.

ஆட்சி அதிகாரம் மட்டுமே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு முக்கியம். மக்கள் மீது அவருக்கு அக்கறை இல்லை.

கள்ளச்சாராயம் குடித்து பெற்றோர்களை இழந்து வாடும் குழந்தைகளின் கல்விச்செலவை அ.தி.மு.க. ஏற்கும். பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு மாதம் தோறும் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். 10 ஆண்டுகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News