உள்ளூர் செய்திகள் (District)

அடையாறு ஆறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் தண்ணீர் பயன்படுத்த தகுதி இல்லாதவையாக மாறின- ஆய்வில் தகவல்

Published On 2023-01-18 07:05 GMT   |   Update On 2023-01-18 07:05 GMT
  • ஒரு லிட்டர் தண்ணீரில் 2 முதல் 8 மில்லி கிராம் கரைந்த ஆக்சிஜன் இருக்க வேண்டும்.
  • நகர மயமாக்கல், மோசமான கண்காணிப்பில் இந்த ஆறுகளில் கழிவுகள், ரசாயன குப்பைகள் கொட்டப்பட்டு பயன்படுத்த முடியாத அளவுக்கு மாறிவிட்டது.

சென்னை:

சென்னை நகரில் பாயும் முக்கிய ஆறுகளாக கூவம், அடையாறு ஆறு, பக்கிங்காம் கால்வாய் உள்ளன. தற்போது இந்த ஆறுகளின் தண்ணீர் மாசு அடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன.

இதனை சரி செய்ய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் நடத்திய பரிசோதனையில் அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் ஆகிய 3 நீர் நிலைகளும் பயன்படுத்த முடியாத அளவில் இருப்பது தெரிய வந்து இருப்பது அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

தேசிய நதிகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் உள்ள ஆறுகள் மற்றும் நீர்நிலைகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இதில் அடையாற்றில் 23 இடங்களிலும், கூவம் ஆற்றில் 18 இடங்களிலும் பக்கிங்காம் கால்வாயிலும் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுகள் செய்யப்பட்டது.

இதில் அடையாறு மற்றும் கூவம் ஆற்றில் மாதிரி சேகரிக்கப்பட்ட 41 இடங்களில் எதிலும் கரைந்த ஆக்சிஜன் இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

இதனால் இந்த நீரில் எந்த வகை உயிரினங்களும் வாழ தகுதி இல்லாதவையாக மாறி இருக்கிறது.

ஒரு லிட்டர் தண்ணீரில் 2 முதல் 8 மில்லி கிராம் கரைந்த ஆக்சிஜன் இருக்க வேண்டும். இதேபோல் ரசாயன ஆக்சிஜன் 30 வரை இருக்கலாம்.

சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரில் உயிரியல் ஆக்சிஜன் 20-க்கும் கீழ் இருக்க வேண்டும். ஆனால் நெசப்பாக்கம் மற்றும் பெருங்குடியில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் 56-க்கும் மேல் உள்ளது. நெசப்பாக்கத்தில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் கூவம் மற்றும் பெருங்குடியில் இருந்து அடையாற்றில் கலக்கிறது.

இந்த தகவல்கள் தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் நீர்பகுப்பாய்வு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது.

இதுதொடர்பாக சமூக ஆர்வலர் ஒருவர் கூறும்போது, 'அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் ஆறுகள் பல ஆண்டுகளுக்கு முன்பே பயன்படுத்த முடியாத நிலைக்கு சென்று விட்டன.

தற்போது மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கை இதை உறுதிபடுத்தி உள்ளது.

நகர மயமாக்கல், மோசமான கண்காணிப்பில் இந்த ஆறுகளில் கழிவுகள், ரசாயன குப்பைகள் கொட்டப்பட்டு பயன்படுத்த முடியாத அளவுக்கு மாறிவிட்டது. இனி அரசால் எதுவும் செய்ய முடியாது' என்றார்.

Tags:    

Similar News