உள்ளூர் செய்திகள்

அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: பஞ்சலிங்க அருவியில் குளிக்க தடை நீடிப்பு

Published On 2024-08-01 06:58 GMT   |   Update On 2024-08-01 06:58 GMT
  • வினாடிக்கு 3ஆயிரத்து 673 கன அடி தண்ணீர் வெளியேற்றம்.
  • கடல் போல் காட்சி அளிக்கும் அமராவதி அணை.

உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அருகில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கேரளா மற்றும் தமிழக வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகளை ஆதாரமாகக் கொண்டு அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது.

அணைக்கு ஏற்படுகின்ற நீர்வரத்தை அடிப்படையாக கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் பாசனம் மற்றும் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றன.

கடந்த சில நாட்களாக அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையால் அணையின் நீர் இருப்பு கிடு கிடுவென உயர்ந்து, அதன் முழு கொள்ளளவை எட்டியதுள்ளது.

அதைத்தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி கடந்த மாதம் 18-ந்தேதி அமராவதி ஆற்றில் உபரிநீர் திறந்து விடப்பட்டது. அதன் பின்பு பலத்த மழையின் காரணமாக தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் உபரி நீரும் அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாய் மூலமாக தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதை முன்னிட்டு அணையின் நீர் பிடிப்பு பகுதியான கேரளாவில் பலத்த மழை பெய்து வருகின்றன. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதற்கான சூழல் நிலவுகிறது.

இதனால் அணை பொதுப்பணித்துறை அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு இரவு பகலாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் நீர்வரத்து அதிகரித்தால் கூடுதலாக உபரிநீர் திறப்பதற்கு உண்டான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக அமராவதி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள கிராமங்களில் பதற்றமும் ஏற்பட்டு வருகிறது.

தற்போதைய நிலவரப்படி 90 அடி உயரம் கொண்ட அணையில் 88.78 அடி உயரத்திற்கு எட்டியது. அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 840 கன அடி தண்ணீர் வந்து உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 3ஆயிரத்து 673 கன அடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

மேலும் உடுமலை பகுதியில் அவ்வப்போது சாரல்மழையும் பெய்து வருவதால் திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. கடல் போல் காட்சி அளிக்கும் அமராவதி அணை.

Tags:    

Similar News