கோத்தகிரி மார்க்கெட்டில் கீழே கிடந்த பணப்பையை எடுத்து போலீசாரிடம் கொடுத்த முதியவர்
- பையில் 2000 ரூபாய் பணம், ஆதார் கார்டு, ஏ.டி.எம் கார்டு இருந்தது.
- போலீசார் உரியவரை வரவழைத்து ஒப்படைத்தனர்
அரவேணு,
கோத்தகிரி தினசரி மார்க்கெட்டில் பணப்பை ஒன்று கிடந்தது. இதனை அந்த வழியாக சென்ற கெட்சிகட்டி யை சேர்ந்த மணி என்பவர் பார்த்தார். பின்னர் அதனை எடுத்த பார்த்தார். அப்ேபாது அந்த பையில் 2000 ரூபாய் பணம், ஆதார் கார்டு, ஏ.டி.எம் கார்டு இருந்தது.
அதனை ஒப்படைப்பதற்காக நீண்ட நேரமாக அங்கேயே காத்திருந்தார். ஆனால் யாரும் வராததால் நேராக, கோத்தகிரி போலீஸ் நிலையத்திற்கு சென்றார்.
அங்கு இருந்த போலீசாரிடம் இந்த பணப்பை கீழே கிடந்தது. யாருடையது என்று தெரியவில்லை என கூறி அதனை ஒப்படைத்தார்.
இதையடுத்து போலீசார் அந்த பணப்பை யாருடையது என்பதை கண்டறிய அதில் இருந்த பொருட்களை ஆய்வு செய்தனர். அப்போது அதில் இருந்த ஆதார்கார்டு மூலம், பணப்பையை தவறவிட்டது, கூடலூர் ஒவேலியை சேர்ந்த கலாதேவி என்பவருக்கு சொந்தமானது என்பதை கண்டுபிடித்தனர்.
உடனடியாக அதில் இருந்த போன் நம்பருக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்து போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்தனர். பின்னர் அந்த பெண்ணும் போலீஸ் நிலையத்திற்கு வந்தார்.
போலீசார் அவரிடம் விசாரித்த போது, தனது உறவினர் வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு மீண்டும் கூடலூர் திரும்பிய போது பணப்பையை தவற விட்டதாக தெரிவித்தார்.
இதையடுத்து குன்னூர் துணை சூப்பிரண்டு கோவிந்தசாமி, இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் அர்ஜூனன் ஆகியோர் கலாதேவியிடம் பணப்பையை ஒப்படைத்தனர். மேலும் பணப்பையைக் கண்டெடுத்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த மணியை போலீஸ் துணை சூப்பிரண்டு பாராட்டி ஊக்குவித்தார்.
கீழே கிடந்த பணப்பையை எடுத்து போலீசாரிடம் ஒப்படைத்த மணிக்கு பொதுமக்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.