உள்ளூர் செய்திகள்

அண்ணாசாலை ஜி.பி.ரோட்டில் குளம் போல தண்ணீர் தேங்கியது- வாகன போக்குவரத்து அடியோடு முடக்கம்

Published On 2023-05-02 07:21 GMT   |   Update On 2023-05-02 07:21 GMT
  • தாழ்வான பகுதிகள் மற்றும் முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியது.
  • ராயப்பேட்டை மணிக்கூண்டு நோக்கியும், மணிக்கூண்டில் இருந்து அண்ணாசாலையை நோக்கியும் எந்த வாகனங்களும் இயக்கப்படவில்லை.

சென்னை:

சென்னையில் கோடை வெயில் கடந்த சில நாட்களாகவே வாட்டி எடுத்தது. இதனால் பகல் நேரங்களில் வெளியில் தலை காட்டமுடியாத அளவுக்கு வெப்பம் அதிகமாகவே இருந்தது.

வெளிமாவட்டங்களில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்த போதிலும் சென்னையில் மட்டும் வெயில் மக்களை வாட்டி எடுத்தது.

இந்நிலையில் சென்னை யில் நேற்று பகலில் திடீரென மழை பெய்தது. காலை 11.30 மணி அளவில் பெய்ய தொடங்கிய மழை விட்டு விட்டு பெய்து கொண்டே இருந்தது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

வேப்பேரி, எழும்பூர், கோடம்பாக்கம், பெரம்பூர், மாதவரம், எண்ணூர், மூலக்கடை, கோயம்பேடு, விருகம்பாக்கம் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் மழை விட்டு விட்டு பெய்து கொண்டே இருந்தது. இந்த நிலையில் நேற்று இரவு திடீரென சென்னை மாநகர் முழுவதும் பலத்த மழை கொட்டியது. இதே போன்று தாம்பரம் மற்றும் ஆவடி சுற்று வட்டார பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது.

இதனால் தாழ்வான பகுதிகள் மற்றும் முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியது. இதன் காரணமாக இன்று காலையில் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். அண்ணா சாலையை யொட்டியுள்ள ஜி.பி ரோட்டில் முட்டளவுக்கு மழை நீர் தேங்கி நின்றது. இதன் காரணமாக அந்த சாலையில் முற்றிலுமாக போக்குவரத்து முடங்கியது. தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகம் இருக்கும் இந்த சாலை எப்போதும் பரபரப்பாகவே காணப்படும்.

இன்று காலையில் அதிக அளவில் தண்ணீர் தேங்கி இருந்ததால் அண்ணா சாலையில் இருந்து ராயப்பேட்டை மணிக்கூண்டு நோக்கியும், மணிக்கூண்டில் இருந்து அண்ணாசாலையை நோக்கியும் எந்த வாகனங்களும் இயக்கப்படவில்லை.

சாலையின் இரு புறமும் தடுப்பு கம்பிகளை வைத்து போலீசார் மூடினர். இதனால் இந்த சாலையை நோக்கி வந்தவர்கள் மாற்று பாதைகளில் திருப்பிவிடப்பட்டனர்.

பட்டாளம் சந்திப்பு அருகிலும் அதிக அளவில் தண்ணீர் தேங்கி நின்றது. அதில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. மயிலாப்பூர் திரு.வி.க. சாலையிலும் தண்ணீர் குளம்போல தேங்கி நின்றது. சென்னையில் இதே போன்று பெரும்பாலான பகுதிகள் இன்று வெள்ளத்தில் மிதந்தன.

இன்று காலையிலும் மழை விட்டுவிட்டு பெய்து கொண்டே இருந்தது. சாரல் மழை போன்று தூரலும் போட்டது. இதனால் சென்னையில் இதமான சூழல் நிலவியது.

Tags:    

Similar News