உள்ளூர் செய்திகள்

14417 எண்கள் பொறிக்கப்பட்ட டி-சர்ட் அணிந்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய அன்பில் மகேஷ்

Published On 2024-10-10 06:47 GMT   |   Update On 2024-10-10 06:48 GMT
  • மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க 14417 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்.
  • இதுவரை 224 பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு கலந்துரையாடி உள்ளார்.

சென்னை:

பொது தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வின் மீதான பயம் காரணமாக பல்வேறு தவறான முடிவுகளை எடுக்கிறார்கள். தற்கொலை செய்து கொ்ளவது, வீட்டை விட்டு ஓடிப்போவது என மாணவர்கள் மேற்கொள்ளும் செயல்களை தடுப்பதற்கும் அவர்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்குவதற்கும் 14417 என்கிற கட்டணமில்லா தொலைபேசி எண் செயல்பட்டு வருகிறது.

கடந்த 2018-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த எண் மாணவர்களுக்கு மிகவும் பயன் உள்ளதாகவே செயல்பட்டு வருகிறது.


இந்த எண்ணை மாணவர்கள் மத்தியில் மேலும் கொண்டு சேர்க்க வேண்டும் என்கிற நல்ல எண்ணத்தில் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் 14417 எண்கள் பொறிக்கப்பட்ட மஞ்சள் நிற டி-சர்ட்டை அணிந்து வருகிறார். டி-சர்ட்டின் பின்பகுதியில் இந்த எண் பொறிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கல்வி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது;-

பள்ளி கல்வி துறையின் தகவல் மையம் போலவும் மாணவ-மாணவிகளுக்கு உரிய மனநல ஆலோசனையை வழங்குவதற்கும் செயல்பட்டுவரும் 14417 என்கிற எண்கள் பொறிக்கப்பட்ட டி.சர்ட்டை அமைச்சர் அன்பில் மகேஷ் கடந்த 6 மாதமாக அணிந்து வருகிறார்.

கடந்த 3 ஆண்டுகளாக பள்ளிகளில் ஆய்வு மேற் கொண்டு வரும் அவர் இது வரை 224 பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடியுள்ளார். விரைவில் முதல் அமைச்சரின் கொளத்தூர் தொகுதியில் தனது ஆய்வை அமைச்சர் முடிக்க உள்ளார்.


மாணவர்களின் மனதில் 14417 என்கிற எண் முழுமையாக பதிய வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அந்த எண்கள் பொறிக்கப்பட்ட டி.சர்ட்டை அமைச்சர் அணிந்து வருகிறார். இது நல்ல பலனையும் கொடுத்துள்ளது.

மனநல ஆலோசனை தொடர்பான எண் எது என்று தெரியாமல் இருந்த மாணவ, மாணவிகளின் மனதிலும் அந்த எண் பதிவாகி இருக்கிறது.

மாணவர்கள் தங்களுக்கு தேவைப்படும் அத்தனை தகவல்களையும் இந்த எண்ணில் தொடர்பு கொண்டு கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

Tags:    

Similar News